கோவை, நீலகிரியில் ஆன்லைன் வர்த்தகம் என்ற பெயரில் ரூ.62 லட்சம் மோசடி: போலீஸார் விசாரணை


கோவை / குன்னூர்: கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஆன்லைன் வர்த்தகம் என்ற பெயரில் தம்பதி, பாதிரியார், பெண் பொறியாளர், ஐடி நிறுவன ஊழியரிடம் ரூ. 62 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து சைபர் க்ரைம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

கோவை சாயிபாபா காலனி சண்முகம் வீதியைச் சேர்ந்தவர் ஆய்ஷா ஷர்மிள் ஜகான்(29). சாப்ட்வேர் இன்ஜினியர். கடந்த 7-ம் தேதி ஆலியா என்ற பெண் வாட்ஸ் அப் மூலம் இவரைத் தொடர்பு கொண்டார். அவர், “வெப்சைட்களுக்கு மதிப்பு கொடுக்கும் ஆன்லைன் பகுதிநேர வேலைவாய்ப்பு உள்ளது.

ஆர்வம் இருந்தால் அதில் சேரலாம். அதிக லாபம் கிடைக்கும்” எனக்கூறியுள்ளார். அதை நம்பிய ஆய்ஷா, ஆன்லைன் பகுதி நேர வேலையில் சேர்ந்தார். அவர்கள் கொடுத்த டாஸ்க் படி வேலை செய்தார். அதில் சிறிய தொகை லாபம் கிடைத்தது. பின்னர், பல்வேறு தவணைகளில் ரூ.5 லட்சத்து 42 ஆயிரத்து 505 முதலீடு செய்தார். ஆனால், கூறியபடி லாபத் தொகை கிடைக்கவில்லை. முதலீடு செய்த பணத்தையும் எடுக்க முடியவில்லை. அதன் பின்னரே, தான் மோசடி செய்யப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து அவர் கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸாரிடம் புகார் அளித்தார். அதன்பேரில், அடையாளம் தெரியாத நபர்கள் மீது மோசடி, தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். இதேபோல், நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த பாதிரியாரை தொடர்புகொண்டு, பணம் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் வழங்கப்படும் என ஆசை வார்த்தை கூறப்பட்டுள்ளது.

இதை நம்பி ஆன்லைன் மூலமாக முதலில் ரூ.8000 முதலீடு செய்துள்ளார். இதையடுத்து, அவருடைய கணக்கில் கூடுதல் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, மொத்தமாக ரூ.6 லட்சம் முதலீடு செய்த பிறகு, அவருக்கு பணம் கிடைக்கவில்லை. போலி ஐடி மூலமாக தொடர்பு கொண்ட நபர்களையும், இவரால் மீண்டும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இந்த பணத்தை நண்பர் ஒருவரிடம் கடன் வாங்கி முதலீடு செய்ததாக கூறப்படுகிறது.

இதேபோல், குன்னூரை சேர்ந்த 25 வயது இளைஞர், ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய உறவினர் ஒருவரின் ஆலோசனையின்பேரில், கிரிப்டோகரன்சி ஆன்லைன் முதலீடு என்ற பெயரில் புதிதாக செயலியை பதிவிறக்கம் செய்து, சைபர் கிரைம் ஆசாமிகளிடம் ரூ.6.20 லட்சத்தை இழந்துள்ளார்.

இந்த 2 சம்பவங்கள் குறித்து உதகை சைபர் கிரைம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் குன்னூர் பகுதியை சேர்ந்த ஆசிரியர் தம்பதிக்கு வாட்ஸ்-அப் மூலமாக குறுந்தகவல் வந்துள்ளது. அதில், குறிப்பிட்ட செயலியை பதிவிறக்கம் செய்து பணம் முதலீடு செய்தால், கூடுதல் லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறப்பட்டுள்ளது.

இதை நம்பி முதலில் ரூ.5000, ரூ.10,000 என தொடங்கி மொத்தமாக ரூ.44,34,300-ஐ தம்பதி முதலீடு செய்துள்ளனர். ஆனால், அவர்களுக்கு பணம் வரவில்லை. இதனால் ஏமாற்றமடைந்து உதகை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் தம்பதி புகார் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

x