ஶ்ரீவில்லிபுத்தூர் பாரில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் கொலை: உரிமையாளர் உட்பட 4 பேர் கைது


ஶ்ரீவில்லிபுத்தூரில் பாரில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் பார் உரிமையாளர் உட்பட 4 பேரை கைது செய்தனர்.

சிவகாசி அருகே சித்துராஜபுரம் சசி நகரைச் சேர்ந்த ராஜகுருசாமி மகன் மாயன் (27). இவர் ஶ்ரீவில்லிபுத்தூர் திருமுக்குளம் தெப்பத்தில் மூழ்கி உயிரிழந்த தனது உறவினர் குருநாதன் என்பவரது இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் ஶ்ரீவில்லிபுத்தூர் வந்தார். மாலையில் சங்கூரணி அருகே உள்ள பாரில் நண்பர்களுடன் சேர்ந்து மாயன் மது அருந்தி உள்ளார். அங்கு பார் உரிமையாளரான அய்யம்பட்டி தெருவைச் சேர்ந்த பரமன்(62) என்பவருடன் தகராறு ஏற்பட்டு உள்ளது. அப்போது பரமன் மற்றும் அங்கிருந்தவர்கள் தாக்கியதில் மாயன் உயிரிழந்தார்.

தகவலறிந்து வந்த போலீஸார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து பார் உரிமையாளர் பரமன், ரைட்டன்பட்டி மான்சிங் ராஜா(41), இடையபொட்டல் தெருவை சேர்ந்த போஸ்(58), சீனியாபுரத்தை சேர்ந்த அருள் அசோக்(43) ஆகிய 4 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

x