வேலூர் அரசு மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய கைதி சிக்கினார்: 4 போலீஸார் சஸ்பெண்ட்


வேலூர்: அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து தப்பி ஓடிய தண்டனை கைதியை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், பாதுகாப்பு பணியில் கவனக்குறைவாக இருந்த 4 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில்வே கூட்ஸ்ஷெட் அருகே சுற்றித்திரிந்தவர் பாபு அகமது ஷேக் (55). கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர், கடந்த 2021-ம் ஆண்டு காட்பாடி மகளிர் மேல்நிலை பள்ளி அருகே யாசகம் செய்தவரை அடித்துக்கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் தண்டனை பெற்ற பாபு அகமது ஷேக், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு குடல் இறக்க நோய் பாதிப்பு சிகிச்சைக்காக கடந்த பிப். 15-ம் தேதி வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை பாபு அகமது ஷேக் காவல் துறை பாதுகாப்பை மீறி தப்பிச் சென்றார். இதுதொடர்பாக பாதுகாப்பு பணியில் இருந்த இரண்டாம் நிலை காவலர் கோகுல் என்பவர் அளித்த புகாரின்பேரில் வேலூர் கிராமிய காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர் மேலும், தப்பியோடிய பாபு அகமது ஷேக்கை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதற்கிடையில், வேலூர் அடுத்த சித்தேரி ரயில் நிலையம் அருகேயுள்ள செங்கல் சூளை புதரில் பதுங்கியிருந்த பாபு அகமது ஷேக்கை தனிப்படையினர் நேற்று கைது செய்தனர்.

அதேபோல், மருத்துவமனையில் பாதுகாப்பு பணியில் கவனக்குறைவாக இருந்ததாக வேலூர் ஆயுதப்படை தலைமை காவலர் பொற்கை பாண்டியன், இரண்டாம் நிலை காவலர்கள் கோகுல், சத்தியமூர்த்தி, கண்ணன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் உத்தரவிட்டுள்ளார்.

x