திமுக பொறுப்பாளர் வீட்டில் 25 பவுன் நகை, ரூ.2 லட்சம் பணம் திருட்டு: ஆம்பூர் அருகே பரபரப்பு


வேலூர்: ஆம்பூர் அருகே திமுக ஒன்றிய பொறுப்பாளர் வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் தங்க நகைகள், ரூ.2 லட்சம் ரொக்கம், வெள்ளி நகைகள் உள்ளிட்டவற்றை திருடிச்சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் காந்தி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ராம மூர்த்தி. இவர், திமுக மாதனூர் ஒன்றிய பொறுப்பாளராக இருந்து வருகிறார். அவருக்கு, அதே தெருவில் மேலும் இரண்டு வீடுகள் சொந்தமாக உள்ளன. அவரது பழைய வீட்டை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருவதால் அருகில் உள்ள மற்றொரு வீட்டில் தங்கியுள்ளார்.

வீடு புதுப்பிப்பு பணிக்காக வழக்கம்போல் நேற்று ராமமூர்த்தி சென்றுள்ளார். அப்போது, அந்த வீட்டின் மேல்தளத்தின் அறையில் இருந்த பீரோவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பீரோவை சோதனையிட்டதில், அதிலிருந்த சுமார் 25 பவுன் தங்க நகைகள், ரூ.2 லட்சம் ரொக்கம், வெள்ளி பொருட்கள் மற்றும் ஐபோன் உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.

இது குறித்து, ஆம்பூர் கிராமிய காவல் நிலைத்தில் ராம மூர்த்தி கொடுத்த புகாரின்பேரில் ஆய்வாளர் வெங்கடேசன் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

x