சேலத்தில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.18 லட்சம் மதிப்பிலான செல்போன் டவரை மர்ம நபர்கள் தனித்தனியாக கழற்றி திருடிச் சென்ற சம்பவம் குறித்து கிச்சிப்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் கிச்சிப்பாளையம் எருமாபாளையம் சாலையில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான செல்போன் டவர் கடந்த 2016-ம் ஆண்டு ரூ.18.75 லட்சம் மதிப்பில் நிறுவப்பட்டது. பி்னனர், கடந்த 2018-ம் ஆண்டு செல்போன் நிறுவனம் மூடப்பட்ட நிலையில், செல்போன் டவர் பயன்பாடற்று இருந்து வந்தது.
இந்நிலையில், செல்போன் டவர் நிறுவனத்தின் அதிகாரி தமிழரசன் (35) கடந்த ஜன.31-ம் தேதி எருமாபாளையம் பிரதான சாலையில் செல்போன் டவரை ஆய்வு செய்ய வந்தார். அங்கிருந்த செல்போன் டவர் திருடுபோயிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்த தமிழரசன், கிச்சிப்பாளையம் போலீஸில் புகார் அளித்தார்.
கிச்சிப்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில், மர்ம நபர்கள் செல்போன் டவரை கொஞ்சம் கொஞ்சமாக தனித்தனியாக கழற்றி திருடிச் சென்றது தெரியவந்துள்ளது. செல்போன் டவர் இருந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் கைப்பற்றி ஆய்வு செய்து மர்ம நபர்களை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.