மதுரை: ஆந்திர மாநிலத்தில் இருந்து கன்டெய்னர் லாரியில் மதுரைக்கு கஞ்சா கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 150 கிலோ கஞ்சா மற்றும் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
மதுரை ஆரப்பாளையம் தென்கரை சாலையில், கரிமேடு போலீஸார் நேற்று முன்தினம் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த கன்டெய்னர் லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் 8 மூட்டைகளில் 150 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, கஞ்சா கடத்தி வந்த 4 பேரிடமும் போலீஸார் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் கோவையைச் சேர்ந்த பிரேம் குமார் (35), மதுரை அலெக்ஸ் பாண்டியன் (37), விஜயகுமார் (40) மற்றும் திருச்சியைச் சேர்ந்த தீபக் (32) என்பது தெரியவந்தது.
இவர்கள், ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் ஏலூரில் இருந்து கஞ்சா வாங்கி வந்து மதுரையில் விநியோகம் செய்ய முயன்றது தெரியவந்தது. இந்த 4 பேரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்து 150 கிலோ கஞ்சா மற்றும் கன்டெய்னர் லாரியையும் பறிமுதல் செய்தனர்.