ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக ரூ.25 லட்சம் மோசடி: மதுரை தம்பதி உட்பட 5 பேர் மீது வழக்கு


சிவகங்கை: ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.25 லட்சம் மோசடி செய்த மதுரையைச் சேர்ந்த தம்பதி உட்பட 5 பேர் மீது, சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே மொட்டையன்வயல் கிராமத்தைச் சேர்ந்த கருப்பணன் மனைவி சீதா (54). இவருக்கு உறவினர் ஒருவர் மூலம் மதுரையைச் சேர்ந்த ரமேஷ், அவரது மனைவி செல்வி ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டது.

இந்நிலையில், அவர்கள் தங்களது மகன் ரயில்வே அதிகாரியாக இருப்பதாகவும், பணம் கொடுத்தால் வேலை வாங்கலாம் என்றும் கூறியுள்ளனர். இதை நம்பிய சீதா, கடந்த 2022 மே மாதத்தில் தனது மகன், தனது உறவினர் மகனுக்கு ரயில்வேயில் வேலை வாங்கித் தருமாறு அவர்களிடம் தெரிவித்தார். இதற்காக, ரமேஷ், செல்வி, அவர்களது மகன் பாலா உள்ளிட்ட 5 பேரிடம் ரூ.25 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால், அவர்கள் வேலை வாங்கித் தராமலும், பணத்தை திருப்பித் தராமலும் ஏமாற்றி வந்துள்ளனர்.

இதையடுத்து சீதா அளித்த புகாரின்பேரில், சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் ரமேஷ், செல்வி, பாலா உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

x