ஜோலார்பேட்டை அருகே பெண் காவலரிடம் 10 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச்சென்ற மர்ம நபர்களைப் பிடிக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சின்ன வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி (42). இவர் திருப்பத்தூர் எஸ்.பி. அலுவலகத்தில் மாவட்ட குற்றப்பிரிவில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து லட்சுமி இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்குப் புறப்பட்டுச்சென்றார்.
ஜோலார்பேட்டை அடுத்த ரெட்டியூர் அருகே லட்சுமி சென்றபோது அவரை பின் தொடர்ந்து மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் லட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பியோடினர். இதில், நிலைதடுமாறி லட்சுமி கீழே விழுந்து படுகாயமடைந்தார்.
இதையடுத்து, அங்கிருந்தவர்கள் விரைந்து வந்து லட்சுமியை மீட்டுத் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஜோலார்பேட்டை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
இதற்கிடையே, தலைமைக் காவலர் லட்சுமி கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை அபகரித்துச் சென்ற மர்ம நபர்களைப் பிடிக்கத் திருப்பத்தூர் நகரக் காவல் ஆய்வாளர் ஜெயலட்சுமி தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை காவல் துறையினர் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.