உடுமலை அருகே தம்பதி தற்கொலை - காவல் துறை விசாரணை


உடுமலை அருகே மனைவி தற்கொலை செய்து கொண்ட நிலையில், கணவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உடுமலை அருகே ராகல்பாவி ஊராட்சி ஆர்.கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (34). இவரும், பக்கத்து ஊரான முக்கோணம் பகுதியை சேர்ந்த அபிநயா (27) என்பவரும் விரும்பி, திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு சிவிகா (9) என்ற மகளும், சர்வேஷ் (6) என்ற மகனும் உள்ளனர். அண்மையில் செல்வராஜூக்கு பட்டுக்கோட்டையில் இயங்கி வரும் கோழிப் பண்ணையில் உற்பத்தி மேலாளர் பணி கிடைத்தது.

இதனால் குடும்பத்தைவிட்டு அங்கேயே தங்கி வேலை பார்த்து வந்தார். வாரத்தில் சனிக்கிழமை சொந்த ஊருக்கு வரும் செல்வராஜ், ஞாயிற்றுக் கிழமை குடும்பத்தினருடன் இருந்துவிட்டு பிறகு மீண்டும் பட்டுக்கோட்டைக்கு செல்வது வழக்கம். இந்நிலையில் கடந்த 8ம் தேதி செல்வராஜ் வீட்டுக்கு வந்தபோது, அபிநயா குளியலறையில் தூக்கில் அசைவற்ற நிலையில் தொங்கிக் கொண்டிருந்தார்.

அவரை செல்வராஜ் மீட்டு, உடுமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். ஆனால் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தகவலறிந்து உடுமலை போலீஸார் வந்து விசாரணை நடத்தினர். அப்போது, அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள மோட்டார் அறைக்கு சென்ற செல்வராஜ், அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவரது சடலத்தையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். தம்பதி தற்கொலைக்கான காரணம் குறித்து உடுமலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர். பெற்றோரை இழந்து அழுது துடித்த குழந்தைகளை, அவர்களது உறவினர்கள் பாதுகாப்பில் போலீஸார் ஒப்படைத்தனர்.

தற்கொலை தீர்வல்ல: தற்கொலை எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது. தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.

x