சென்னை: சேத்துப்பட்டில் போதைப் பொருள் வைத்திருந்த 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை சேத்துப்பட்டு போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் நேற்று முன்தினம் இரவு ஜோதியம்மாள் நகர், நமச்சிவாயபுரம் பாலம் அருகே தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்பகுதியில் கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் இருந்த இளைஞர்களை பிடித்து, அவர்களது வாகனங்களை போலீஸார் சோதனை செய்தனர். அப்போது, 2 வாகனங்களிலும் மெத்தம் பெட்டமைன், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், அந்த நபர்கள் புதுச்சேரியை சேர்ந்த பைஜுர் ரகுமான் (33), திருமுல்லை வாயிலை சேர்ந்த கொடவதி கண்டி சுனில் பாபு (23), ஆவடியை சேர்ந்த கிருபாகரன் (28), காஞ்சிபுரத்தை சேர்ந்த ஆகாஷ் (27) என்பது தெரியவந்தது.
இதையடுத்து, அவர்களை கைது செய்த போலீஸார், அவர்களிடம் இருந்து 3.6 கிராம் மெத்தம்பெட்டமைன், 90 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து, 4 பேரையும் சிறையில் அடைத்தனர்.