சென்னை: சமூக வலைதளத்தில் இளம் பெண்ணுக்கு ஆபாச படம் அனுப்பிய இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த 26 வயது இளம் பெண் கடந்த 2017ம் ஆண்டு தனியார் கல்லூரியில் படித்து வந்த போது, அதே கல்லூரியில் படித்த, விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த தினேஷ் (29) என்ற மாணவர், முகநூல் மூலம் அப்பெண்ணுக்கு அறிமுகமாகி உள்ளார். அப்போது, தினேஷ், அந்த இளம் பெண்ணுக்கு அடிக்கடி முக நூலில் குறுஞ்செய்தி அனுப்பி வந்துள்ளார். இதையடுத்து, அந்த பெண், மேற்படிப்புக்காக வேறு கல்லூரியில் சேர்ந்தார்.
பின்னர், தினேஷ், அந்த பெண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புவதை நிறுத்திவிட்டார். இந்நிலையில், கடந்த ஆண்டு செப்.11ம் தேதி தினேஷ் தனது முகநூல் பக்கத்தில் இருந்து, அந்த இளம் பெண்ணுக்கு, தனது ஆபாச படத்தை அனுப்பி, வீடியோ காலில் இளம் பெண்ணை அழைத்து, ஆபாசமாக நடந்துள்ளார்.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண், சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார் தினேஷை தேடி வந்த நிலையில், நேற்று முன்தினம் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.