சென்னை: கொத்தவால் சாவடியில் இருசக்கர வாகனத்தில் கடத்தி வந்த 35 கிலோ குட்காவை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
சென்னை கொத்தவால் சாவடி பகுதியில் குட்கா புகையிலை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, கொத்தவால் சாவடி நாட்டு பிள்ளையார் கோயில் தெரு காந்தி சிலை அருகில் போலீஸார் நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரை நிறுத்தி போலீஸார் விசாரித்தனர்.
அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியதால் போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடு்த்து அந்த நபர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பாக்கெட்கள் இருந்தது தெரிந்தது. பிடிபட்ட நபர், கொண்டித்தோப்பு பகுதியை சேர்ந்த விக்கி(38) என்பது தெரியவந்தது. அவரை போலீஸார் கைது செய்து, அவரிடம் இருந்து 35 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.