திண்டிவனம் அரசு கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர்; போக்சோவில் கைது


திண்டிவனம்: அரசு கலைக்கல்லூரியில் முதலாமாண்டு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

திண்டிவனத்தில் அரசு கலைக் கல்லூரியில் சுமார் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இக்கல்லூரியில் புதுச்சேரி, ஜெயமூர்த்தி ராஜா நகர், இன்ஜினியர் காலனியில் வசிக்கும் குமார் (48) என்பவர் பொருளாதாரத்துறையில் உதவி பேராசிரியராக பணியாற்றிவருகிறார்.

இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் தற்போது வரை தொலைபேசி மூலமாகவும் மற்றும் சமூக வலைதளம் மூலமாகவும் அக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் ஒரு மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 5ம் தேதி குமார், அந்த 17 வயது மாணவியின் தொலைபேசிக்கு தொடர்பு கொண்டு தவறான முறையில்பேசி பாண்டிச்சேரிக்கு போகலாம் எனக் கூறி அழைத்துள்ளார். மேலும் அன்று இரவு 9 மணி அளவில் வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ஆடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது

இதுகுறித்து சிறுமி பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இப்புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து குமாரை கைது செய்து போக்சோ நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையிலடைத்தனர். கல்லூரி மாணவிக்கு பேராசிரியரே பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

x