சென்னையில் கள்ளநோட்டுகள் வைத்திருந்த கேரள நபர் கைது: ரூ.9.48 கோடி மதிப்பில் போலி நோட்டுகள் பறிமுதல்!


சென்னை: ராயப்பேட்டை பகுதியில் போலி 2,000 ரூபாய் நோட்டுகள் வைத்திருந்த கேரளா மாநிலத்தைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டார். ரூ.9.48 கோடி மதிப்பிலான போலி நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”சென்னை, நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை அலுவலகத்தில் அதிகாரியாக பணிபுரியும் ஷ்ரவன் குமார் ரெட்டி என்பவர் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், பிப்ரவரி 4ம் தேதி அன்று ராயப்பேட்டை, பூரம் பிரகாசம் ராவ் சாலையில் உள்ள வீட்டில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை செய்த போது, மேற்படி வீட்டில் சட்டவிரோதமாக 2,000 ரூபாய் போலி நோட்டுகள் கேரளாவை சேர்ந்த ரஷீத் அழிக்கோடன் தேகத் என்பவர் வைத்திருந்ததாகவும் அவர் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கும்படி கூறியிருந்தார்.

அதன்பேரில் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.ராயப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட கண்ணூர் ரஷீத் அழிக்கோடன் தேகத் (41) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.9.48 கோடி மதிப்பிலான போலி 2,000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் விசாரணையில் ஒருவரை ஏமாற்றும் நோக்கில் போலி நோட்டுகளை வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட ரஷீத் அழிக்கோடன் தேகத் நேற்று (06.02.2025) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்” என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x