சென்னை நகை பட்டறையில் 183 கிராம் தங்கம் திருட்டு: மேற்குவங்கத்தில் இருவர் கைது!


சென்னை: மாம்பலம் பகுதியில் உள்ள தங்க நகை பட்டறையில் தங்க நகைகளை திருடிய ஊழியர்கள் இருவர் மேற்கு வங்கம் மாநிலத்தில் கைது. 183 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை, சூளைமேடு, சிவானந்தா சாலை என்ற முகவரியில் வசித்து வரும் சையது வாசுதீன் கில்ஜி (39) என்பவர் தி.நகர் மூசா தெருவில் வாஜித் ஜீவல்லர்ஸ் என்ற பெயரில் தங்க நகை பட்டறை நடத்தி வருகிறார். இவர் கடந்த ஜனவரி 18ம் தேதி அன்று மேற்படி தங்க நகை பட்டறையில் வேலை செய்து வந்த மேற்கு வங்கம் மாநிலத்தைச் சேர்ந்த எஸ்.கே.சானி மற்றும் ஆரிப் ரஹ்மான் ஆகிய இருவரிடம், 188.260 கிராம் தங்க நகைகளை பாலீஸ் போடுவதற்காக கொடுத்து விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் ஊழியர்கள் சானி மற்றும் ஆரிப் ரஹ்மான் ஆகிய இருவரும் பாலீஸ் போடுவதற்காக கொடுத்த தங்க நகைகளை திருடிக்கொண்டு, நகை பட்டறையில் இருந்து தப்பிச்சென்றுள்ளனர். இது குறித்து சையது வாசுதீன் கில்ஜி R-1 மாம்பலம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

R-1 மாம்பலம் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணையில், மேற்படி தங்க நகை பட்டறையில் வேலை செய்த ஊழியர்கள் S.K.சானி மற்றும் ஆரிப் ரஹ்மான் தங்க நகைகளை திருடிக்கொண்டு அவர்களது சொந்த ஊரான மேற்கு வங்கம் மாநிலத்திற்கு தப்பிச்சென்றது தெரியவந்தது.

அதன்பேரில் தனிப்படை போலீசார் மேற்கு வங்கம் மாநிலத்திற்கு விரைந்து சென்று அங்கு முகாமிட்டு, மேற்படி திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட இருவரையும், மேற்கு வங்கம் மாநிலத்தில் வைத்து கைது செய்து அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சென்னை அழைத்து வந்தனர். அவர்களிடம் இருந்து 183 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட இருவரும் நேற்று (23.01.2025) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x