சென்னை: செம்பியம் பகுதியில் 2 நபர்களை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சென்னை, கிழக்கு தாம்பரம், ஆனந்தபுரம், பார்க் தெருவைச் சேர்ந்த அழகு சுந்தரம் (40) பெரம்பூர், வீனஸ் மார்ககெட், அருகேயுள்ள வணிக வளாகத்தில் உள்ள நகைக் கடையில் ஆச்சாரியாக வேலை செய்து வருகிறார். அழகு சுந்தரம் ஜனவரி 22ம் தேதி அன்று இரவு டிபன் வாங்குவதற்காக, இவரது கடையின் வணிக வளாகத்தில் இருந்து வெளியே செல்லும் போது, அங்கு நின்றிருந்த 2 நபர்கள் அழகு சுந்தரத்தை அழைத்து தகாத வார்த்தைகளால் பேசி கையாலும், பீர் பாட்டிலாலும் தாக்கினர்.
உடனே, இதனை கண்ட அழகு சுந்தரத்துடன் வேலை செய்து வரும் சுரேஷ் என்பவர் மேற்படி இருவரை தடுத்தபோது, இருவரும் சேர்ந்து பீர் பாட்டிலால் சுரேஷின் தலையில் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பிச் சென்றனர். இரத்தக் காயமடைந்த இருவரும் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வரும் நிலையில், மேற்படி சம்பவம் குறித்து அழகு சுந்தரம் கொடுத்த புகார் மீது செம்பியம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
செம்பியம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட பெரம்பூரை சேர்ந்த யோகேஷ் (23) மற்றும் கொளத்தூரை சேர்ந்த சாமுவேல் (20) ஆகிய இருவரை கைது செய்தனர். விசாரணையில் யோகேஷ் மீது ஏற்கனவே 5 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட இருவரும் விசாரணைக்குப் பின்னர் நேற்று (23.01.2025) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.