சென்னை: அமைந்தகரை பகுதியில் மாஞ்சா நூல் விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து மாஞ்சா நூல் ரோல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”மாஞ்சா நூல் பயன்படுத்தி காற்றாடி பறக்கவிடுவது உயிர் இழப்பு போன்ற விபத்துக்களை ஏற்படுத்தும் என்பதால் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களின் செயல் முறை உத்தரவின் பேரில் சென்னை பெருநகர காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காற்றாடி மற்றும் மாஞ்சா நூல் தயாரிப்பது, விற்பனை செய்வது மற்றும் பறக்க விடுவது தடை செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 19ம் தேதி அன்று மதியம் அமைந்தகரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மாஞ்சா நூல் பயன்படுத்தி காற்றாடி பறக்க விட்ட நபரால், அமைந்தகரை, என்எஸ்கே நகர், அண்ணா வளைவு மேம்பாலம் அருகே, அமைந்தகரை காவல் நிலைய பெண் காவலர் ரம்யா இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, அவரது கழுத்தில் மாஞ்சா நூல் பட்டு காயம் ஏற்பட்டது. காயமடைந்த பெண் காவலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இது குறித்து கொடுத்த புகாரின் பேரில் அமைந்தகரை காவல் நிலையத்தில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அமைந்தகரை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து காற்றாடி பறக்க விட்ட நபரை தேடி விசாரணையில் கிடைத்த தகவலின் பேரில், அமைந்தகரை பகுதியில் மாஞ்சா நூல் தயாரித்து விற்பனை செய்த தங்கராஜ் மகன் பஞ்சாட்சரம் (42) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1 மாஞ்சா நூல் ரோல் பறிமுதல் செய்யப்பட்டது. மேற்படி வழக்கில் காற்றாடி பறக்க விட்ட நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட பஞ்சாட்சரம் ஜனவரி 21ம் தேதி (நேற்று) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்” என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.