தமிழகத்திலிருந்து கடத்தப்பட்ட 108 கிலோ கஞ்சா, 1,289 கிலோ பீடி இலைகள் பறிமுதல்: இலங்கை கடற்படை நடவடிக்கை


இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்கள்.

ராமேசுவரம்: தமிழக கடற்பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட 108 கிலோ கஞ்சா மற்றும் 1,289 கிலோ பீடி இலைகளை அந்நாட்டு கடற்படையினர் பறிமுதல் செய்து 6 பேரை கைது செய்துள்ளனர்.

இலங்கை கடற்படையினர் ரோந்து பணியின் போது சந்தேகத்திற்குரிய முறையில் தமிழக கடல் எல்லையில் இருந்து யாழ்ப்பாணம் கடற்பகுதிக்குள் நுழைந்த ஒரு பைபர் படகினை சோதனையிட்டனர். சோதனையில் படகில் மறைத்து வைத்திருந்த 44 பொட்டங்களில் இருந்து 108 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, படகில் இருந்த யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்த 4 பேரை கைது செய்தனர்.

மேலும், புத்தளம் மாவட்டம் கல்பிட்டி கடற்பகுதியில் ஒரு படகினை பறிமுதல் செய்து படகில் இருந்து 1,289 கிலோ பீடி இலைகளை பறிமுதல் செய்தனர். மேலும படகில் இருந்த இரண்டு புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மற்றும் பீடி இலைகள் அந்நாட்டு சுங்கத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, கடத்தலில் மேலும் தொடர்புடையவர்கள் குறித்து கடற்படையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறனர்.

x