சென்னை: யானைகவுனி பகுதியில் காதலிக்க வற்புறுத்தி பெண்ணின் மீது பெட்ரோல் ஊற்றிய வழக்கில் 2 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக காவல்துறை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "சென்னை, யானைகவுனி பகுதியில் வசித்து வரும் 19 வயது பெண் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசித்து வரும் அர்ஜுன் என்பவரை காதலித்து வந்துள்ளார். பின்னர் அர்ஜுனின் நடவடிக்கைகள் பிடிக்காததால் அவரை விட்டு விலகியுள்ளார். ஆனால் அடிக்கடி அர்ஜுன் அந்த பெண்ணை பின் தொடர்ந்து சென்று அவரை காதலிக்க வற்புறுத்தி தொந்தரவு செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் அந்தப் பெண் வேலை முடித்து நேற்று (02.01.2025) வால் டாக்ஸ் ரோடு, கல்யாணபுரம், பள்ளம் பேருந்து நிறுத்தம் அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது, அங்கு இருசக்கர வாகனத்தில் அர்ஜுன் மற்றும் அவரது நண்பர் ஜேம்ஸ் ஆகிய இருவரும் வந்துள்ளனர். அப்போது அர்ஜுன் அந்தப் பெண்ணிடம் தகராறு செய்து, வாட்டர் கேனில் இருந்த பெட்ரோலை பெண்ணின் மேல் ஊற்றிவிட்டு அங்கிருந்து ஜேம்ஸ் உடன் தப்பிச் சென்றுள்ளார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் C-2 யானைகவுனி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டனர். சி-2 யானைகவுனி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணை செய்து மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட ராஜாவின் மகன் அர்ஜுன் (20), யேசுவின் மகன் ஜேம்ஸ் (20) ஆகிய இருவரை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் அர்ஜுன் தனியார் உணவு டெலிவரி நிறுவனத்தில் வேலை செய்து வருவது தெரியவந்தது. கைது செய்யப்பட்டவர்கள் இருவரும் விசாரணைக்குப் பின்னர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.