தமிழகத்தையே அதிரவைத்த இளம்பெண் கொலை: குற்றவாளியை அறிவித்தது நீதிமன்றம்


சென்னை: பரங்கிமலை ரயில் நிலையத்தில் சத்ய பிரியா என்ற பெண்ணை ரயில் முன் தள்ளி கொலை செய்த வழக்கில், சதீஷ் குற்றவாளி என இன்று மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. கடந்த 2022ம் ஆண்டு காதல் விவகாரத்தில் நடைபெற்ற இந்த கொடூர கொலை பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது.

சென்னை ஆலந்தூர் போலீஸ் குடியிருப்பைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மனைவி ராமலட்சுமி, ஆதம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றினார். இவர்களது மூத்த மகள் சத்யபிரியா, தியாகராயநகரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. 3ம் ஆண்டு படித்து வந்தார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் தயாளன் என்பவரது மகன் சதீஷ் என்பவரை காதலித்து வந்தார். பிறகு சதீஷின் நடவடிக்கைகள் பிடிக்காததால் அவரை விட்டு மெல்ல பிரிய துவங்கியிருக்கிறார்.

இதை ஏற்றுக்கொள்ள முடியாத சதீஷ், தன்னை காதலிக்குமாறு தொல்லை கொடுத்து வந்துள்ளார். சத்யா காதலிக்காததால் ஆத்திரமடைந்த சதீஷ், கடந்த 2022 அக்டோபர் 13ம் தேதி கல்லூரிக்குச் செல்ல பரங்கிமலை ரயில் நிலையம் வந்த சத்ய பிரியாவை, தாம்பரம் சென்று கொண்டிருந்த மின்சார ரயில் முன்பு தள்ளிவிட்டு கொலை செய்தார். இந்த வழக்கு சென்னை அல்லிகுளத்தில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் நடந்தது.

சிபிசிஐடி தரப்பில் 70 சாட்சிகள் விசாரணை செய்யப்பட்டதாகவும், அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு இன்று (டிசம்பர் 27ம் தேதி) அறிவிப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, சதீஷ் குற்றவாளி என இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சதீஷுக்கான தண்டனை விவரங்கள் வரும் 30ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x