கோயம்புத்தூர்: கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட எஸ்.ஏ.பாஷா இன்று மாலை உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
கோவை தெற்கு உக்கடம் பகுதியைச் சேர்ந்தவர் எஸ்.ஏ.பாஷா (74). தடை செய்யப்பட்ட அல் உம்மா இயக்க தலைவராக இருந்த இவர், கடந்த 1998-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கோவையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் முதல் குற்றவாளியாக கைது செய்யப்பட்டார். அவருக்கு நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதால், தொடர்ந்து 25 ஆண்டுகளாக கோவை மத்திய சிறையில் எஸ்.ஏ.பாஷா அடைக்கப்பட்டிருந்தார்.
அவருக்கு கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 16-ம் தேதி பாஷாவுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. முதலில் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்ட அவருக்கு பிணை வழங்கப்பட்டது. தொடர்ந்து ராமநாதபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை மற்றும் ரேஸ்கோர்ஸில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், அவர் வீட்டில் இருந்தபடி சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று பாஷாவுக்கு மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் பீளமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை பலனின்றி இன்று மாலை அவர் உயிரிழந்தார்.