தரமணியில் கல்லூரி மாணவரை தாக்கிய நபர் கைது: கத்தி, பைக் பறிமுதல்


சென்னை: தரமணி பகுதியில் கல்லூரி மாணவரை தாக்கிய நபரை போலீஸார் கைது செய்தனர். மேலும், தாக்குதல் நடத்த பயன்படுத்திய கத்தியை பறிமுதல் செய்தனர்.

கந்தன்சாவடியில் வசித்து வருபவர் தஸ்லீம் ஷரிப். இவர் பல்லாவரம் பகுதியிலுள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 9ம் தேதி கந்தன்சாவடி அருகே மளிகை கடையில் நின்றிருந்த மாணவரை, அதே பகுதியை சேர்ந்த சரத்குமார் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

பின்னர், வீட்டிற்கு சென்றதும் சரத்குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு கல்லூரி மாணவர் தஸ்லீமின் கையில் வெட்டியுள்ளார். அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் தஸ்லீமை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். முன்னதாக பொதுமக்கள் வருவதை கண்ட சரத்குமார் அவரது இருசக்கர வாகனத்தில் தப்பியதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து தரமணி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

தரமணி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான குழுவினர் டிசம்பர் 10ம் தேதி சரத்குமாரை கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்த தாக்குதலுக்கு பயன்படுத்திய கத்தி மற்றும் அவரது இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் சரத்குமார் மீது ஏற்கனவே கஞ்சா வழக்கு உட்பட 2 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பது தெரியந்தது. கைது செய்யப்பட்ட சரத்குமார் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.

x