கோவில்பட்டி: தனியார் பயிற்சி நிறுவனம் அமைக்க அனுமதி வாங்கித் தருவதாகக் கூறி, பிஎஸ்என்எல் அதிகாரியிடம் ரூ.15.50 லட்சம் மோசடி செய்த தேனி மாவட்ட இளைஞரை போலீஸார் கைது செய்தனர். கோவில்பட்டி அருகே பாண்டவர்மங்கலம் ஊராட்சி ராஜீவ்நகர் 5-வது தெருவைச் சேர்ந்தவர் சவரிராஜ்(67). கோவில்பட்டிபிஎஸ்என்எல் நிறுவனத்தில் உதவி பொறியாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.
இவரை, தேனி மாவட்டம் சீலையம்பட்டியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன்(31) என்பவர் கடந்த 2018-ம் ஆண்டு சந்தித்தார். பாதுகாப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை அகாடமி என்ற தனிப் பயிற்சி கல்வி நிறுவனம் நடத்தி, அதிக பணம் சம்பாதிக்கலாம் என்றும், இந்நிறுவனம் தொடங்குவதற்கான அனுமதியை, அகில இந்திய ரயில்வே பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினரான தன்னால் வாங்கித் தரமுடியும் என்றும் கூறியுள்ளார்.
மேலும், அகில இந்திய ரயில்வே பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் என, கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் ராஜராஜ நகரைச் சேர்ந்த பத்மநாபன்(54) என்பவரை சவரிராஜிடம் அறிமுகம் செய்துள்ளார். அதுபோலவே, சென்னை தண்டையார்பேட்டை ஜீவா நகர் 2-வது தெருவைச் சேர்ந்த காந்தியை(46) செயலாளர் எனவும், தேனி மாவட்டம் சின்னமனூர் ஜமீன்பிரபுவை(27) தலைமை ஒருங்கிணைப்பாளர் எனவும் அறிமுகம் செய்து வைத்தார்.
இவர்கள் 4 பேரும் சேர்ந்து, தனிப் பயிற்சி கல்வி நிறுவன அனுமதி வாங்கித் தருவதாக கூறி, பல்வேறு கட்டங்களாக சவரிராஜிடம் சுமார் ரூ.15,36,641 பெற்றுள்ளனர். கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், அகில இந்திய ரயில்வே தனிப் பயிற்சி கல்வி நிறுவனம் நடத்துவதற்கான அனுமதிச் சான்றிதழை மேற்கண்ட 4 பேரும், சவரிராஜிடம் வழங்கினர். இதைப் பெற்றுக் கொண்ட சவரிராஜ், வாடகை கட்டிடம் ஒன்றில் பயிற்சி கல்வி நிறுவனத்தை தொடங்கினார்.
4 பேர் தலைமறைவு ஆனால், மத்திய அரசின் அங்கீ கார எண்ணை வழங்காமல் இவர்கள் காலதாமதப்படுத்தி வந்தனர். சந்தேகமடைந்த சவரிராஜ், 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் கோவில்பட்டி குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். நீதிமன்ற உத்தரவின்பேரில், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து, பண மோசடியில் ஈடுபட்ட 4 பேரையும் தேடி வந்தனர். இந்நிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய ஜமீன்பிரபுவை(27) போலீஸார் நேற்று கைது செய்தனர். மற்ற 3 பேரையும் தேடி வருகின்றனர்.