சென்னை: போதைப் பொருள் விற்பனை விவகாரத்தில் சென்னையை சேர்ந்த காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: மெத்தம்பெட்டமைன் என்ற விலை உயர்ந்த போதைப் பொருள் கடத்தல் கும்பலை சென்னை தெற்கு மண்டல அதிதீவிர குற்றத்தடுப்பு பிரிவு போலீஸார் அண்மையில் பெங்களூருவில் கைது செய்தனர். கைதானவர்கள் கொடுத்த தகவலின்பேரில் தூத்துக்குடி, உடன்குடியை சேர்ந்தவரும் சென்னையில் சமையல் கலைஞராக பணியாற்றுபவருமான ரகு என்பவர் பிடிபட்டார். அவர் கொடுத்த தகவலின்படி திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்தகண்ணன் கைதானார்.
இவர்கள் மொபைல் செயலி மூலம் பழக்கமானநபர்களிடம் போதை பொருட்களை வாங்கி, கூடுதல் விலைக்கு விற்று வந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. குறிப்பாக கண்ணன்பெங்களூருவில் உள்ள கேமரூன் நாட்டவரான ஜோனதான் என்பவரிடமிருந்து போதைப் பொருளை வாங்கி வந்து சென்னையில் கிராம் ரூ.1500-க்கும் மேல் விலை வைத்து விற்பனை செய்துவந்தது தெரியவந்தது.ஆரணி கண்ணன் செல்போனை போலீஸார் ஆய்வு செய்தபோது சென்னை அயனாவரம் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் காவலராக பணியாற்றும் பரணி என்பவருடன் அவர் அடிக்கடி செல்போனில் பேசியதும், ஜி-பே மூலம் பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.
இதையடுத்து, காவலர் பரணியை விசாரித்தபோது, செயலி மூலம் கேரளாவை சேர்ந்த அபிஷேக் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, அவரிடமிருந்து போதைப் பொருளை வரவழைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸார் கைது செய்தனர். மேலும், சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவுப்படி பரணி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.