தூத்துக்குடி, உடன்குடியில் ஒரே நாளில் 2 தொழிலாளிகள் கொலை


தூத்துக்குடி: தூத்துக்குடி மற்றும் உடன்குடி பகுதியில் ஒரே நாளில் நடந்த இருவேறு சம்பவங்களில் இரண்டு தொழிலாளிகள் கொலை செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி அருகே உள்ள திரவியபுரம் கிழக்கு தெருவை சேர்ந்த இருதயமரியான் மகன் இருதயமணி (55). இவருடைய மகள் மரிய விண்ணரசி. இவருக்கும், தூத்துக்குடி சின்னகண்ணுபுரத்தை சேர்ந்த சண்முகவேல் மகன் ஆனந்த் (26) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஆனந்த் தனியார் நிறுவனத்தில் கூலி வேலை செய்து வந்தார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் ஆனந்த் மது குடித்து விட்டு சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தாராம். இதனை மரியவிண்ணரசி கண்டித்துள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த மரிய விண்ணரசி கடந்த ஓராண்டாக கணவனை பிரிந்து திரவியபுரத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.

இதனால் ஆனந்த் அடிக்கடி மாமனார் வீட்டுக்கு சென்று மனைவி, குழந்தையை பார்த்து விட்டு, தன்னோடு வருமாறு அழைத்து வந்தாராம். நேற்று (மே 26) மாலை மாமனார் வீட்டுக்கு சென்ற ஆனந்த், மனைவியை தன்னோடு அனுப்பி வைக்குமாறு கூறி தகராறு செய்துள்ளார். ஆனால் மரிய விண்ணரசி குடும்பத்தினர் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அங்கிருந்து சென்ற ஆனந்த் இரவு 11 மணியளவில் மீண்டும் மாமனார் வீட்டுக்கு சென்றுள்ளார். வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் இருந்த இருதயமணியை சந்தித்து பேசியுள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.

இதில் ஆத்திரமடைந்த ஆனந்த், தோட்டத்தில் கிடந்த உருட்டு கட்டையை எடுத்து இருதயமணியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த இருதயமணி சம்பவ இடத்திலேயே இறந்தார். உடனடியாக ஆனந்த் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இது குறித்து புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய ஆனந்தை தேடி வருகின்றனர்.

உடன்குடி கொலை: உடன்குடி அருகே உள்ள சிறுநாடார்குடியிருப்பு குடியிருப்பு சேர்ந்த பூபழம் மகன் செந்தில்குமார் (52), சைக்கிளில் பழைய இரும்பு வியாபாரம் செய்வதுடன், சமையல் தொழிலுக்கும் செல்வார். இவரது உறவினர் இதே ஊரைச் சேர்ந்த பொன்னுசாமி மகன் துரைப்பாண்டி (60). இவரும் சைக்கிளில் பழைய இரும்பு வியாபாரம் செய்வதுடன் சமையல் வேலைக்கும் சென்று வந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு சிறுநாடார்குடியிருப்பில் நடைபெற்ற ஒரு பூப்புனித நீராட்டு விழாவில் இருவரும் சமையலுக்கு சென்றுள்ளனர். அப்போது பந்தியில் முட்டை வைப்பது தொடர்பாக இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது,

இதில் ஆத்திரமடைந்த துரைப்பாண்டி அரிவாளால் செந்தில்குமார் காலில் வெட்டினார், இதில் நரம்பு துண்டாகி ரத்தம் அதிகமாக வெளியேறியதாக கூறப்படுகிறது. ஆபத்தான நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில்குமார், அங்கு சிகிச்சை பலனில்லாமல் இறந்தார், இது குறித்து குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான துரைபாண்டியனை தேடி வருகின்றனர்.