அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ஆட்டோவில் பெண்ணை ஏற்றிச் சென்று கத்தியால் குத்தி, அவர் அணிந்திருந்த நகைகளை ஆட்டோ ஓட்டுநர் உள்ளிட்ட 2 பேர் நேற்று அதிகாலை பறித்து சென்றனர்.
விருதுநகர் யானைக்குழாய் தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி சித்ராதேவி (43). அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் பணியாற்றி வருகிறார். இதற்காக தினமும் காலை 5 மணி அளவில் விருதுநகரி்ல் இருந்து பேருந்தில் அருப்புக்கோட்டை செல்வது வழக்கம். அதுபோல் நேற்று அதிகாலை 5 மணி அளவில் அருப்புக்கோட்டை செல்வதற்காக விருதுநகர் பழைய பேருந்து நிலையம் நோக்கி வந்துள்ளார்.
அப்போது, அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் சித்ராதேவியை மறித்து, தான் சவாரிக்காக அருப்புக்கோட்டை செல்வதாகவும், அதனால் தனது ஆட்டோவிலேயே அருப்புக்கோட்டையில் இறக்கி விடுவதாகவும் கூறியுள்ளார். அதை நம்பி சித்ராதேவியும் அந்த ஆட்டோவில் ஏறிச் சென்றுள்ளார். பாலவநத்தம் அருகே சென்றபோது, அடையாளம் தெரியாத மற்றொரு நபரும் ஆட்டோவில் ஏறியுள்ளார்.
பாலவநத்தம்- அருப்புக்கோட்டை இடையே ஆட்டோ சென்றபோது, சாலையோரத்தில் ஆட்டோவை நிறுத்தி ஆட்டோ ஓட்டுநரும், உடன் வந்த நபரும் திடீரென சித்ராதேவியை கத்தியால் பல இடங்களில் குத்தியுள்ளனர். பின்னர், அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டும், காதில் அணிந்திருந்த தோடுகளை அறுத்துக் கொண்டும் சித்ராதேவியை கீழே தள்ளிவிட்டு தப்பிச்சென்றனர். சாலையோரத்தில் ரத்தக் காயத்துடன் கிடந்த சித்ராதேவியை அவ்வழியே சென்றவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தகவல் அறிந்த அருப்புக் கோட்டை தாலுகா போலீஸார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், நகையை கொள்ளையடித்து தப்பிச் சென்றது விருதுநகரைச் சேர்ந்த தங்கப்பாண்டி (37), அவரது நண்பர் குல்லூர்சந்தையைச் சேர்ந்த ராமநாதன் (36) எனத் தெரிய வந்தது. அதையடுத்து, தூத்துக்குடி சாலையில் பதுங்கியிருந்த இருவரையும் போலீஸார் கைது செய்தனர். கொள்ளையடிக்கப்பட்ட 5 பவுன் நகை மற்றும் கத்தியை போலீஸார் பறிமுதல் செய்தனர்.