சிபிஐ கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு: டெல்லி உயர்நீதிமன்றத்தில் அர்விந்த் கேஜ்ரிவால் மனு


அர்விந்த் கேஜ்ரிவால்

டெல்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் தன்னை சிபிஐ கைது செய்ததை எதிர்த்து டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் அம்மாநில உயர் நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்தார்.

டெல்லி கலால் கொள்கை தொடர்புடைய பண மோசடி வழக்கில் அம்மாநில முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கடந்த மார்ச் 21ம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார்.

இடையே மக்களவைத் தேர்தல் வந்த நிலையில், தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக கடந்த மே 10ம் தேதி, உச்ச நீதிமன்றம் கேஜ்ரிவாலுக்கு 21 நாட்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது. அதன் பின்னர், கடந்த ஜூன் 2ம் தேதி கேஜ்ரிவால் மீண்டும் சிறைக்கு திரும்பினார்.

சிபிஐ

இந்நிலையில் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கேஜ்ரிவாலை, கடந்த 26ம் தேதி சிபிஐ-யும் கைது செய்தது. மேலும், அவரை 3 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தவும் விசாரணை நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

சிபிஐ காவலில் இருக்கும் போது கேஜ்ரிவாலை அவரது மனைவி சுனிதா கேஜ்ரிவால், அவரது வழக்கறிஞர்கள் தினமும் 30 நிமிடங்கள் சந்திக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. தடுப்புக் காவலின் போது கேஜ்ரிவாலுக்கு உரிய மருந்துகள், வீட்டில் சமைத்த உணவு ஆகியவற்றை வழங்கவும் நீதிமன்றம் அனுமதி அளித்தது.

டெல்லி உயர்நீதிமன்றம்

இந்நிலையில் சிபிஐ கைது நடவடிக்கை மற்றும் தன்னை காவலில் எடுத்து விசாரணை நடத்த வழங்கப்பட்ட அனுமதி ஆகியவற்றை எதிர்த்து அர்விந்த் கேஜ்ரிவால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்தார்.

x