தந்தையும் மகனும் அரங்கேற்றிய பாலியல் பலாத்காரம்... இஸ்ரேலிய பெண் வன்கொடுமை மரணத்தில் ஹமாஸ் அதிர்ச்சி வாக்குமூலம்


மகன் அப்துல்லா மற்றும் தந்தை ஜமால்

இஸ்ரேல் பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்து, கொன்றதாக ஹமாஸ் பயங்கரவாதிகளான தந்தை - மகன் வாக்குமூலம் தந்திருக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை தந்துள்ளது.

கடந்தாண்டு அக்டோபர் 7 அன்று, இஸ்ரேலுக்குள் அத்துமீறி நுழைந்த ஹமாஸ் பயங்கரவாதிகள் கொடூரத் தாக்குதலை அரங்கேற்றினார்கள். இதில் இஸ்ரேல் தரப்பில் 1200 பேர் கொல்லப்பட்டனர். 243 பேர் பணயக் கைதிகளாக காசாவுக்கு கடத்திச் செல்லப்பட்டனர். இதனையடுத்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் பழிவாங்கல் நடவடிக்கை தொடங்கியது. அப்போது ஆரம்பித்த இஸ்ரேல் படைகள், காசாவை நிர்மூலமாக்கி தற்போது ரஃபா மீது பாய்ந்துள்ளனர்.

இதில் காசா வாழ் பாலஸ்தீனியர்கள் 35,000க்கும் மேலானோர் கொல்லப்பட்டனர். இவர்களில் பொதுமக்கள் அதிலும் குறிப்பாக பெண்கள் மற்றும் சிறாரே அதிகம். பாலஸ்தீனர்களை கொன்று குவிக்கும் இஸ்ரேலின் இந்த கோர முகத்துக்கு எதிராக உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. ஹமாஸ் பயங்கரவாதிகளை பூண்டோடு அழிக்கும்வரை போர் நிறுத்தம் இல்லை என இஸ்ரேல் உறுதியாக நிற்கிறது. பாலஸ்தீன தரப்பில் சேதம் அதிகம் என்பதால், சர்வதேச சமூகத்தின் அனுதாபம் அப்பக்கமே சேர்ந்து வருகிறது. எனவே, ஹமாஸ் அமைப்பினரின் மறுப்பக்கத்தை தோலுரிக்கும் முயற்சிகளில் இஸ்ரேல் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

அந்த வகையில் தற்போது வெளியிட்டிருக்கும் ஒரு வீடியோவில், இஸ்ரேல் வசம் கைதிகளாக சிக்கியிருக்கும் தந்தை - மகன் ஆகியோரின் வாக்குமூலம் பதிவாகி உள்ளது. அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீதான தாக்குதலின் போது ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றதாக, தந்தை - மகன் விளக்கும் அதிர்ச்சியூட்டும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன. 47 வயதான ஜமால் ஹுசைன் அஹ்மத் ராடி மற்றும் அவரது 18 வயது மகன் அப்துல்லா ஆகிய இருவரும் தற்போது இஸ்ரேல் சிறையில் உள்ளனர்.

இஸ்ரேலின் கிப்புட்ஸ் நிர் ஓஸில் புகுந்த ஹமாஸ் பயங்கரவாதிகள், வீடு ஒன்றில் இளம்பெண் ஒருவரை துப்பாக்கி முனையில் மடக்கி பாலியல் பலாத்காரம் செய்தனர். தந்தை ஜமால், மகன் அப்துல்லா ஆகியோர் அடுத்தடுத்து அந்த இளம்பெண்ணை நாசம் செய்த பிறகு, அப்துல்லாவின் உறவினரான இன்னொரு இளைஞரும் பாலியல் பலாத்காரத்தை தொடர்ந்திருக்கிறார். இறுதியாக ஜமால் தனது கையால் அந்த பெண்ணைக் கொன்றதில் மூவரும் திருப்தி அடைந்திருக்கிறார்கள்.

இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் பயங்கரவாதிகள் அரங்கேற்றிய வெறியாட்டத்தை, அவர்கள் வாயாலேயே இஸ்ரேல் பதிவு செய்து வருகிறது. இது உட்பட ஹமாஸ் அமைப்பினரின் பல்வேறு கோர நடவடிக்கைகளை இஸ்ரேல் வீடியோவாக வெளியிட்டது. முன்னதாக இஸ்ரேலிய ராணுவத்தின் பெண் வீரர்கள் 5 பேர் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் அத்துமீறுவதும், சித்ரவதை மற்றும் கொலையை சுட்டிக்காட்டும் வீடியோ, இணையத்தில் வெளியாகி காண்போரை கலங்கடித்தது.

இந்த வரிசையில், ஹமாஸின் தந்தை - மகன் ஆகியோர் ஒரு இஸ்ரேலிய பெண்ணை பலாத்காரம் செய்து கொன்றதை, அவர்களின் வாக்குமூலமாகவே பதிவு செய்து இஸ்ரேல் வெளியிட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

x