சென்னை என்ஐஏ அலுவலகத்திற்கு அழைத்த மர்ம நபர் ஒருவர், பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
குஜராத்தில் கடந்த 20ம் தேதி விமான மூலம் பயணம் செய்த 4 ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை அகமதாபாத் விமான நிலையத்தில் வைத்து தீவிரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்திருந்தனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இந்தியாவின் பல்வேறு இடங்களில் சதிச் செயல்களில் ஈடுபட அவர்கள் வரவழைக்கப்பட்டது தெரிய வந்தது. எந்த இடத்தில், எந்த மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்துவது என்பது தொடர்பாக தகவல் தெரிவிக்கப்படவில்லை என அவர்கள் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
இதனால் இவர்களை இயக்கிய மர்ம நபர்கள் யார் என்பது தொடர்பாக தீவிர விசாரணையானது நடைபெற்று வருகிறது. இதையொட்டி நாடு முழுவதும் உஷார்படுத்தப்பட்டு பல்வேறு விசாரணை அமைப்புகளும் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள என்ஐஏ அலுவலகத்திற்கு இன்று காலை மர்ம தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் இந்தியில் பேசிய நபர் ஒருவர், பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் சென்னை சைபர் கிரைம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து அந்த தொலைபேசி அழைப்பு எங்கிருந்து வந்தது என்பதை கண்டறிவதற்காக சைபர் கிரைம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாடு முழுவதும் தற்போது மக்களவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த மர்ம டெலிபோன் அழைப்பு வந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிப்பது தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.