பெட்ரோல் பங்கில் விளம்பர பலகை விழுந்த விபத்து: இடிபாடுகளிலிருந்து 73 வாகனங்கள் மீட்பு!


இடிபாடுகளில் சேதமடைந்த வாகனங்கள்

மகாராஷ்டிரா மாநிலம், மும்பை காட்கோபார் பகுதியில் பிரம்மாண்ட விளம்பர பலகை பெட்ரோல் பங்க் மீது விழுந்த விபத்தில் சேதமடைந்த 73 வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன.

மும்பையில் கடந்த 13ம் தேதி மாலை வீசிய புழுதிப் புயலில் காட்கோபார் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த 120 அடி உயர பிரம்மாண்ட விளம்பரப் பலகை அடியோடி சரிந்து அருகில் இருந்த பெட்ரோல் பங்கின் மேற்கூரை மீது விழுந்தது. விளம்பர பலகை விழுந்த வேகத்தில் பெட்ரோல் பங்கின் மேற்கூரையும் சேதமடைந்து சுமார் 90-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். மேலும் 70-க்கும் மேற்பட்ட வாகனங்களும் இடிபாடுகளுக்குள் சிக்கின.

பெட்ரோல் பங்க் மீது சரிந்து விழுந்த ராட்சத விளம்பர பலகை

இந்த விபத்தில் 66 மணி நேரமாக மீட்புப் பணிகள் நடைபெற்றன. இதில் மொத்தம் 16 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 75-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தில் இடிபாடுகளை அகற்றும் பணி கடந்த 4 நாள்களாக நடைபெற்று வந்தன.

மும்பை மாநகராட்சி ஆணையர் புஷன் கக்ரானி சம்பவ இடத்தை நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக தேசிய பேரிடர் மீட்புப் படையின் (என்டிஆர்எப்) 2 குழுக்கள் கடந்த திங்கள்கிழமை மாலையிலிருந்து பணியில் ஈடுபட்டிருந்தது.

மேலும், மும்பை தீயணைப்பு படையினரின் 12 தீயணைப்பு வாகனங்கள், குழுவினரும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இந்நிலையில் மீட்புப் பணிகள் முடிவடைந்ததால் இந்த குழுவினர் அங்கிருந்து திரும்பி சென்றுள்ளன. எனினும், ஜேசிபி, கிரேன்கள் மற்றும் பிற உபகரணங்களின் உதவியுடன் குப்பை அகற்றும் பணி மாலை வரை நடைபெற்றது.

மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட கிரேன்கள்

விளம்பர பலகை சரிந்த விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கி சேதமடைந்த 30 இருசக்கர வாகனங்கள், 31 நான்கு சக்கர வாகனங்கள், 8 ஆட்டோ ரிக்சாக்கள் மற்றும் 2 கனரக வாகனங்கள் உள்பட மொத்தம் 73 வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன.

அவை, அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பதற்காக காவல் துறை வசம் ஒப்படைக்கப்பட்டதாக மும்பை மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

x