அதிர்ச்சி... கேட்பாரற்று நின்றிருந்த காருக்குள் சடலமாக மீட்கப்பட்ட மூவர்!


காரில் சடலமாக கிடந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர்

தேனி அருகே வனப்பகுதியில் கேட்பாரற்று நின்றிருந்த காருக்குள் இருந்து, மூவர் சடலமாக மீட்க்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து கேரள மாநிலத்திற்கு செல்லும் கம்பம் மெட்டு சாலையில் கன்னிமார் ஓடை எனும் பகுதி அமைந்துள்ளது. இரு மாநிலங்களை சேர்ந்த வாகனங்கள் அடிக்கடி இந்த பகுதியில் பயணிப்பது வழக்கம். இன்று காலை அந்த வழியாக வேலைக்கு சென்ற சிலர், கார் ஒன்று நீண்ட நேரமாக புளிய மரத்தடியில் நின்று கொண்டிருப்பதை பார்த்துள்ளனர். காருக்குள் எட்டிப் பார்த்தபோது மூன்று பேர் உள்ளே அசைவற்றுக் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

காரில் சடலமாக கிடந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர்

உடனடியாக இது தொடர்பாக கம்பம் வடக்கு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார் வாகனத்தை திறந்து சோதனை செய்தபோது, ஒரு பெண் உட்பட மூவர் இறந்த நிலையில் காருக்குள் இருந்தது தெரியவந்தது. மூவரது உடலையும் காரில் இருந்து மீட்ட போலீஸார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து காரில் நடத்திய சோதனையின் போது, விஷம் கலக்கப்பட்ட தண்ணீர் பாட்டில் ஒன்று இருந்தது தெரியவந்தது.

விஷம் கலந்த தண்ணீர் பாட்டில் பறிமுதல்

தொடர்ந்து போலீஸார் நடத்திய விசாரணையில், உயிரிழந்தவர்கள் கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. கணவர் ஜார்ஜ் ஸ்காரியா (50), மனைவி மெர்சி (45), மகன் அகில் (35) ஆகியோர் உயிரிழந்தது தெரியவந்தது. சந்தேக மரணமாக பதிவு செய்துள்ள போலீஸார் இவர்கள் மூவரும் தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது கொலை செய்யும் நோக்கில் குடிநீரில் விஷம் கலக்கப்பட்டதா என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...


இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ஓய்வு அறிவிப்பு... உருகும் ரசிகர்கள்

x