அரசுப்பேருந்து இருக்கையின் அடியில் இருந்த துப்பாக்கி, அரிவாள்... அதிர்ச்சியில் உறைந்த நெல்லை!


பேருந்து இருக்கையில் இருந்த துப்பாக்கி, அரிவாள் ஆகியவை பறிமுதல்

சென்னையில் இருந்து நெல்லைக்கு சென்ற அரசு விரைவுப் பேருந்தின் இருக்கையில் துப்பாக்கி மற்றும் அரிவாள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் இருந்து தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும் இரவுநேர அதிவிரைவு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் சார்பில் இந்தப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று இரவு சென்னையில் இருந்து நெல்லைக்கு அரசு விரைவு பேருந்து ஒன்று கிளம்பியது. இன்று காலை 11 மணியளவில் இந்த பேருந்து, நெல்லையை சென்றடைந்தது.

அரசுப்பேருந்துகள்

பயணிகளை இறக்கிவிட்ட பின்னர் வண்ணாரப்பேட்டை பணிமனைக்கு அந்த பேருந்து சென்றது. அப்போது அங்கிருந்த பணியாளர்கள் பேருந்தில் உள்ள இருக்கைகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது படுக்கை ஒன்றின் அடியில் துப்பாக்கி மற்றும் அரிவாள் ஆகிய பயங்கர ஆயுதங்கள் இருப்பதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இது தொடர்பாக பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார் துப்பாக்கி மற்றும் அரிவாளை பறிமுதல் செய்தனர்.

பாளையங்கோட்டை காவல் நிலையம்

இது தொடர்பாக பாளையங்கோட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பந்தப்பட்ட அரசுப் பேருந்தில் தடய அறிவியல் நிபுணர்கள், கைரேகை நிபுணர்கள் ஆகியோர் ஆய்வு செய்தனர். மேலும் வெடிகுண்டு நிபுணர்களும் அந்த பேருந்தில் ஆய்வு மேற்கொண்டனர். சென்னையில் கொலை சம்பவத்தில் ஈடுபட்டு விட்டு இந்த பேருந்தில் யாரேனும் பயணித்திருக்கிறார்களா என தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

தேர்வு எழுத அனுமதி மறுப்பு... ஐந்தாவது மாடியில் இருந்து குதித்து பொறியியல் மாணவர் தற்கொலை!

x