பஞ்சாப் மாநில எல்லையில் ட்ரோன் மூலம் கடத்த முயன்ற 550 கிராம் ஹெராயின் போதை பொருளை எல்லை பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தி பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாகிஸ்தானில் இருந்து கடந்த சில மாதங்களாக ட்ரோன்கள் மூலம் தீவிரவாதிகள் மற்றும் சமூக விரோதிகள் கண்காணிப்பு மேற்கொள்வது மற்றும் போதைப் பொருட்களை கடத்துவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தடுப்பதற்காக எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு அத்துமீறி பறக்கும் ட்ரோன்களை எல்லை பாதுகாப்புப் படையினர் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தி வருகின்றனர்.
இந்த நிலையில், பஞ்சாப் மாநிலம் பாகிஸ்தான் எல்லையில் உள்ள டான் டரன் மாவட்ட எல்லையோரத்தில், ட்ரோன் ஒன்று பறந்து வருவதை எல்லை பாதுகாப்புப் படையினர் கண்டறிந்தனர். அதனை கண்காணித்த போது, அதில் மர்மப் பொருள் ஒன்று கட்டப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த ட்ரோனை பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தினர்.
அந்த ட்ரோனை ஆய்வு செய்தபோது, அது சீனாவில் தயாரிக்கப்பட்டது என்பது தெரியவந்தது. மேலும், அந்த ட்ரோனில் 550 கிராம் எடையிலான தடை செய்யப்பட்ட ஹெராயின் போதைப் பொருள் பாக்கெட் செய்யப்பட்டு கடத்தப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து போதைப்பொருள் மற்றும் ட்ரோனை கைப்பற்றிய எல்லை பாதுகாப்புப் படையினர் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
ஐபிஎல் சூதாட்ட கும்பல் சிக்கியது: இருவர் கைது; ரூ.2.47 லட்சம் பறிமுதல்!