உத்தரபிரதேசத்தின் ஹாப்பூரில் ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட கும்பலை போலீஸார் மடக்கினர். இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் தப்பியோடியவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
உத்தரபிரதேச மாநிலம், ஹாப்பூரில் அஜிம், அரபாத் ஆகிய இருவரும், 'கிரிக்கெட் லைவ் குரு' என்ற செயலியைப் பயன்படுத்தி, ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் ஆன்லைனில் பந்தயம் கட்ட மக்களை ஈடுபடுத்தியுள்ளனர்.
தகவலறிந்த போலீஸார் இது குறித்து விசாரணை நடத்தினர். இதில், ஹிமான்ஷு, ஃபுர்கான், தாஸ் நிஷு (எ) நீரஜ் லால், இம்மு (எ) இம்ரா மற்றும் டெல்லியைச் சேர்ந்த நிக்கு உள்ளிட்ட கும்பல் ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
இதையடுத்து அஜிம், அரபாத் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.2.47 லட்சம் ரொக்கம், லேப்டாப், மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இருவரும் மேற்கண்ட கும்பலுடன் சேர்ந்து சூதாட்டத்தில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டனர். மற்ற குற்றவாளிகள் தப்பி ஓடிவிட்ட நிலையில், அவர்களை பிடிக்கும் முயற்சியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.