வாக்களித்துவிட்டு ஊர் திரும்பியவர்களுக்கு நேர்ந்த சோகம்... விபத்தில் 6 பேர் பலி!


லாரியும் பேருந்தும் மோதி தீப்பிடித்து எரிந்த விபத்தில் 6 பேர் பலி

ஆந்திராவில் சொந்த ஊரில் வாக்களிக்க சென்று விட்டு, ஊர் திரும்பிக் கொண்டிருந்தவர்கள் சென்ற பேருந்து லாரி மீது மோதி, தீப்பிடித்து எரிந்ததில் 6 பேர் சம்பவ இடத்திலேயே தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

ஆந்திர மாநிலத்தில் கடந்த மே 13ம் தேதி சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் வாக்களிப்பதற்காக ஹைதராபாத் உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பணியாற்றுபவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு வருகை தந்தனர். வாக்களித்த பின்னர், குடும்பத்தினருடன் நேரம் செலவழித்துவிட்டு, அவர்கள் நேற்று மீண்டும் பணி செய்யும் ஊர்களுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அந்த வகையில் பாபட்லா மாவட்டத்தைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்டோர் தனியார் பேருந்து ஒன்றில் ஹைதராபாத் நோக்கி பயணித்துக் கொண்டிருந்தனர். பேருந்து நேற்று நள்ளிரவு பால்நாடு மாவட்டத்தில் உள்ள சிலக்காலூரிப்பேட் பகுதி அருகே சென்று கொண்டிருந்த போது, எதிரில் வந்த டிப்பர் லாரி மீது அதிவேகத்தில் மோதியது. இதில், பேருந்து மற்றும் லாரி இரண்டும் தீப்பிடித்து எரியத்துவங்கியது. இரவு தூங்கியபடி பயணித்துக் கொண்டிருந்த பயணிகள், அலறியடித்தபடி படுகாயங்களுடன் பேருந்தில் இருந்து உடனடியாக கீழே இறங்கினர்.

பேருந்து, லாரி ஓட்டுநர்கள் உட்பட 6 பேர் தீயில் கருகி பலி

இருப்பினும் படுகாயமடைந்த, கார் மற்றும் லாரி ஓட்டுநர்கள் உட்பட 6 பேர் உடனடியாக கீழே இறங்க முடியாத நிலையில், தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்புத்துறையினரும், போலீஸாரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்து, விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைகாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். படுகாயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

x