மின் கம்பத்தில் மோதி தீப்பிடித்த ஆம்புலன்ஸ்; உடல் கருகி உயிரிழந்த நோயாளி!


மின் கம்பத்தில் ஆம்புலன்ஸ் மோதி பெண் நோயாளி பலி

கேரளாவின் கோழிக்கோட்டில் இன்று அதிகாலை மின்கம்பத்தில் ஆம்புலன்ஸ் மோதி தீப்பிடித்ததில் நோயாளி ஒருவர் உடல் கருகி உயிரிழந்தார்.

கேரள மாநிலம், கோழிக்கோடு அருகே உள்ளியேரியில் உள்ள மலபார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுலோச்சனா (57), என்ற பெண்ணை அறுவை சிகிச்சைக்காக கோழிக்கோட்டில் உள்ள எம்ஐஎம்எஸ் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் இன்று அதிகாலை கொண்டு சென்றனர்.

அப்போது அந்த ஆம்புலன்ஸ் கல்லுத்தான்கடவு அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக சாலையோர மின் கம்பத்தில் மோதி தீப்பிடித்தது.

இதில் ஆம்புலன்ஸ் வாகனத்தில் இருந்த நோயாளி சுலோச்சனா தீயில் கருகி உயிரிழந்தார். பலத்த மழை பெய்ததால் சாலையின் தெரிவுநிலை குறைந்து இந்த விபத்து நேரிட்டதாக கூறப்படுகிறது.

எனினும் இந்த விபத்தில் சுலோச்சனாவுடன் ஆம்புலன்ஸில் பயணித்த அவரது கணவர் சந்திரன், பக்கத்து வீட்டுப் பெண் பிரசீதா, ஒரு மருத்துவர், 2 நர்சிங் ஊழியர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் டிரைவர் உள்பட 6 பேர் லேசான தீக்காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

மின் கம்பத்தில் மோதி தீப்பிடித்து கருகிய ஆம்புலன்ஸ்

இவர்கள் அனைவரும் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. விபத்தில் உயிரிழந்த சுலோச்சனா நாதபுரத்தை சேர்ந்தவர் என்பதும், இவர் நடன ஆசிரியையாக பணிபுரிந்து வந்ததும் போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது. விபத்து குறித்து போலீஸார் தொடர்ந்து விசாணை நடத்தி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

x