சென்னையில் போலீஸாரின் வாகன சோதனையின்போது ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ஒரு கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருவாய் துறையினரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது.
சென்னை கொத்தவால்சாவடி அண்ணாப்பிள்ளை தெரு மற்றும் டேவிட்சன் தெரு சந்திப்பில் நேற்று இரவு கொத்தவால்சாவடி போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து சோதனை செய்த போது அவர்களிடம் கட்டுக்கட்டாக 1 கோடி ரூபாய் பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்த போலீஸார், இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த அப்துல் ஹாஜா (23 ) மற்றும் மேடவாக்கம் பகுதியை சேர்ந்த தனசேகர் (43) என்பது தெரியவந்தது. அங்கப்பன் நாயக்கன் தெருவில் உள்ள மணி டிரான்ஸ்பர் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களான அவர்கள் இருவரும் அலுவலக பணத்தை கொண்டு செல்வதாக தெரிவித்துள்ளனர்.
ஆனால் அந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் அவர்களிடம் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்து வருமானவரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இருவரிடம் வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.