தஞ்சாவூர் அருகே திமுக எம்எல்ஏ-வின் சகோதரியின் மகன், மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் நெய்க்குன்னம் பகுதியைச் சேர்ந்தவர் நல்லதம்பி. இவர் ஜெயங்கொண்டம் திமுக எம்எல்ஏ-வான கா.சொ.க.கண்ணனின் சகோதரியை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு கலைவாணன் (30) என்ற மகன் உள்ளார். திமுக பிரமுகரான கலைவாணன், விவசாயம் செய்து வருகிறார். நேற்று இரவு தனது வயல்வெளியில் உள்ள மின் மோட்டாரை இயக்குவதற்காக கலைவாணன் சென்றிருந்தார். நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் உறவினர்கள் அவரை தேடிச்சென்றுள்ளனர்.
அங்கு கலைவாணன் மர்ம நபர்களால், அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டு இறந்த கிடந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தகவலறிந்த நிலையில், உடனடியாக பந்தநல்லூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று கலைவாணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து கலைவாணனை கொலை செய்த மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு தடயவியல் துறையினர் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு காவல்துறையினர் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு கலைவாணன் வீட்டில் இருந்த வைக்கோல் போரை மர்ம நபர்கள் சிலர் தீ வைத்து எரித்துள்ளனர். அப்போது சுவற்றில் ’தொடரும்’ என எழுதிவிட்டு அவர்கள் சென்றுள்ளனர். இது தொடர்பாக பலமுறை காவல்துறையில் புகார் அளித்தும் காவல்துறையினர் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.
மேலும் கலைவாணன் கொலை செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு, அவரது வீட்டில் ’உயிரா? பயிரா?’ என பேப்பரில் எழுதி வீசிவிட்டு சென்றிருந்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்தும் போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்காததே, இந்த கொலை சம்பவத்திற்கு காரணம் என அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதையும் வாசிக்கலாமே...
இன்று முதல் 3 நாட்களுக்கு கன மழை; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
பெலிக்ஸ் ஜெரால்டு எங்கே?! கண்டுபிடித்துத் தருமாறு மனைவி காவல்துறையில் மனு!