ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் பெயரில் முகநூல் கணக்கு தொடங்கி பண மோசடி... போலீஸார் தீவிர விசாரணை!


சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பெயரில் போலி ஃபேஸ்புக் கணக்கு துவங்கி மோசடி

சென்னை மாநகராட்சி ஆணையாளர் ராதாகிருஷ்ணன் பெயரில், போலி முக நூல் கணக்கு துவங்கி பணம் கேட்டு மோசடியில் ஈடுபடும் நபர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் தனி நபர்கள் பதிவிடும் புகைப்படங்களை திருடி, அதைக் கொண்டு போலி கணக்கு துவங்கி பண மோசடியில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, முக நூலில் இதுபோன்ற மோசடி நபர்கள் அதிக அளவில் உலா வருகின்றனர். இவர்கள், நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள், முக்கிய நபர்கள் என்று கூறி பண மோசடியில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், சென்னை மாநகராட்சி ஆணையரான ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணன் பெயரில் முக நூல் கணக்கு ஒன்றிலிருந்து அவரது நட்பு வட்டத்தில் உள்ள நபருக்கு நட்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதை நம்பி அதனை ஏற்ற போது, மெசஞ்சர் மூலம் பணம் வழங்குமாறு கோரிக்கை விடப்பட்டுள்ளது.

தன்னிடம் அதற்கான வசதி இல்லை என்று கூறிய ஒருவருக்கு, ஜி பே மூலம் அனுப்புமாறு வேறு ஒரு நபரின் பெயர் மற்றும் கூகுள் பே எண் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அந்த நபர், பணம் அனுப்பாமல் இது தொடர்பாக ராதாகிருஷ்ணனை நேரில் தொடர்பு கொண்டு தகவல் அளித்துள்ளார். அப்போதுதான் ராதாகிருஷ்ணன் பெயரில் மோசடியாக முகநூல் பக்கம் துவங்கி பணம் கேட்டு மோசடியில் ஈடுபட்டு வருவது தெரிய வந்தது.

சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பெயரில் போலி பேஸ்புக் கணக்கு துவங்கி மோசடி

இது தொடர்பாக காவல் நிலையத்தில் மாநகராட்சி ஆணையாளர் ராதாகிருஷ்ணன் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுபோன்ற நபர்களிடம் பணம் கொடுத்து ஏமாறவேண்டாம் என, அவர் சம்பந்தப்பட்ட ஸ்கிரீன்ஷாட்களை பதிவிட்டு கோரிக்கை விடுத்துள்ளார். இதுவரை சாமானியர்கள் பெயரால் மோசடியில் ஈடுபட்டு வந்த நபர்கள், தற்போது பிரபலங்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளை குறிவைத்து இது போன்ற மோசடியில் ஈடுபட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

மகளிர் மல்யுத்தம்... பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார் நிஷா தஹியா!

x