ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி பகுதியில் விபத்து ஒன்றில் சிக்கிய மினி வேனியிலிருந்து கட்டுக்கட்டாக 7 கோடி ரூபாய் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தேர்தல் ஒரே நேரத்தில் நடைபெறுகிறது. 25 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 175 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வருகிற மே மாத 13-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைய உள்ளது. பிரச்சாரத்தின் இறுதி நாளான இன்று அரசியல் கட்சியினர் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இங்கு ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தனித்தும், தெலுங்கு தேசம், பாஜக, ஜனசேனா கட்சிகள் கூட்டணி அமைத்தும் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியும் களத்தில் உள்ளன. மும்முனை போட்டி நிலவுவதால் தேர்தல் களம் கடந்த சில நாட்களாக சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில் இன்று காலை கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் அனந்தபள்ளி பகுதியில் டாடா ஏஸ் மினிவேன் ஒன்று சென்றுகொண்டிருந்தது. வேனுக்கு பின்னால் வந்து கொண்டிருந்த லாரி ஒன்று எதிர்பாராத விதமாக வேன் மீது மோதியது. இதில் சாலையிலேயே டாடா ஏஸ் மினிவேன் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது.
இந்த விபத்தில் காயம் அடைந்த வேன் ஓட்டுநர் மற்றும் உதவியாளர் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனிடையே விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார், மினி வேனை ஆய்வு செய்தனர். அப்போது அந்த வேனில் தவிடு மூட்டைகள் ஏற்றப்பட்டு வந்ததும், அதற்கு மத்தியில் 7 பெட்டிகள் தனியாக ஒளித்து வைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீஸார், அந்த பெட்டிகளை பிரித்துப் பார்த்தபோது அதற்குள் கட்டு கட்டாக பணம் இருந்தது தெரியவந்தது.
உடனடியாக தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு, அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அந்த பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர் அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று எண்ணிய போது அதில் 7 கோடி ரூபாய் பணம் இருந்தது தெரியவந்தது. இந்தப் பணம் ராஜமுந்திரியில் இருந்து விஜயவாடாவுக்கு கடத்தப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
வாக்குப் பதிவுக்கு இரண்டு நாட்களே இருக்கும் நிலையில் ஆந்திராவில் கோடிக்கணக்கில் பணம் கடத்தப்பட்டிருப்பது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தேர்தல் பறக்கும் படையினரும் போலீஸாரும் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.