250 பவுன் நகைகள், ரூ.5 லட்சம் திருட்டு... காவல் ஆய்வாளர் வீட்டில் கைவரிசை!


பெண் ஆய்வாளர் வீடு

மதுரை அலங்காநல்லூர் அருகே பெண் இன்ஸ்பெக்டர் வீட்டின் கதவை உடைத்து 250 பவுன் நகைகள் மற்றும் 5 லட்சம் பணம் திருடப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உடைக்கப்பட்ட கதவு

மதுரை மாவட்டம் பாசிங்காபுரம் மீனாட்சி நகரில் வசிப்பவர் ஷர்மிளா. இவர் திண்டுக்கல் மாவட்டம் விளாம்பட்டி காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று ஷர்மிளா வழக்கம் போல் பணிக்குச் சென்றுவிட்டு இன்று காலை வீட்டுக்குத் திரும்பியுள்ளார். அப்போது இவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கொள்ளை நடந்துள்ளது தெரியவந்தது. வீட்டின் கதவை உடைத்து வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் பீரோவை உடைத்து அதிலிருந்த 250 சவரன் நகைகள் மற்றும் ஐந்து லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து காவல் ஆய்வாளர் ஷர்மிளா அளித்த புகாரின் பேரில் அலங்காநல்லூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கைரேகை நிபுணர்களைக் கொண்டு வீட்டின் கதவு மற்றும் பீரோவில் பதிவாகியிருந்த கைரேகை உள்ளிட்ட தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மோப்பநாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. மேலும் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொள்ளையர்களைப் பிடிக்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காவல் ஆய்வாளர் வீட்டில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

படங்கள் எஸ்.கிருஸ்ணமூர்த்தி

இதையும் வாசிக்கலாமே...

x