கர்நாடக மாநிலத்தில், தான் திருமணம் செய்யவிருந்த 16 வயது சிறுமியை கொன்று, அப்பெண்ணின் துண்டிக்கப்பட்ட தலையுடன் நேற்று தப்பியோடியவர், இன்று சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டத்தில் மைனர் பெண்ணை துள்ளத்துடிக்க கொன்றதுடன், அப்பெண்ணின் துண்டிக்கப்பட்ட தலையுடன் தப்பியோடிய நபர், இன்றைய தினம் தனது வீட்டின் அருகே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். கொல்லப்பட்ட பெண்ணின் துண்டிக்கப்பட்ட தலை கிடைக்காததாலும், தூக்கில் தொங்கிய நபர் கொலையா அல்லது தற்கொலை என்ற சந்தேகத்தாலும், இந்த இரு மரணங்களின் பின்னுள்ள மர்மங்களை விடுவிக்க போலீஸார் போராடி வருகின்றனர்.
கர்நாடகாவின் குடகு மாவட்டம் சோம்வார்பேட்டையில் உள்ளது முட்லு கிராமம். இங்கு வசிக்கும் 32 வயதுடைய பிரகாஷ் என்ற நபர், மைனர் பெண்ணைக் கொன்று, துண்டிக்கப்பட்ட தலையுடன் நேற்று தலைமறைவானார். கொலை குற்றவாளியை பிடிக்க போலீசார் முயன்றபோது, அவரது வீடு அருகே சடலமாக பிரகாஷ் கண்டெடுக்கப்பட்டார்.
16 வயது சிறுமிக்கும் 32 வயது பிரகாஷ்க்கும் திருமண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கான நிச்சயதார்த்தம் நேற்றைய தினம்(மே.9) நடைபெறுவதாக இருந்தது. இதனிடையே சிறுமியின் நிச்சயதார்த்தத்தை, கடைசி நேரத்தில் தலையிட்ட அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். மேலும் திருமணத்தை நிறுத்தவும் சிறுமியின் பெற்றோரை அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
நிச்சயதார்த்தம் மற்றும் திருமணம் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நேற்று மாலை சிறுமியின் வீட்டுக்குள் புகுந்த பிரகாஷ், சிறுமியை வீட்டுக்கு வெளியே இழுத்துப் போட்டு அவரது தலையை வெட்டிக் கொன்றார். பின்னர் வெட்டுப்பட்ட தலையுடன் பிரகாஷ் தலைமறைவானார்.
இந்த சம்பவத்தின்போது கொலையான சிறுமியின் தாயும் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த கொலைக்கான காரணம் முழுமையாக போலீசாரால் கண்டறியப்படவில்லை. பின்னர், குடகு ஹம்மியாலா பகுதியில் உள்ள தனது வீட்டின் அருகே தூக்கில் தொங்கிய நிலையில் பிரகாஷ் சடலம் மீட்கப்பட்டது. எனினும், சிறுமியின் துண்டிக்கப்பட்ட தலையை இதுவரை போலீஸார் மீட்க இயலவில்லை. எனவே துண்டித்த தலையை பிரகாஷ் எங்கே எடுத்துச் சென்றார், அதனை என்ன செய்தார் என்பது மர்மமாக உள்ளது.
அதே போன்று திருமணம் செய்யவிருந்த சிறுமியை தலையை துண்டித்து கொன்றதன் பின்னணியிலான காரணம் குறித்தும் போலீஸார் தீர விசாரித்து வருகின்றனர். பெற்றோர் ஏற்பாடு செய்த திருமணத்தில் தனக்கு விருப்பமில்லாததால், அரசு அதிகாரிகளை தொடர்பு கொண்டு மைனர் திருமணத்தை நிறுத்துமாறு சிறுமியே தெரிவித்திருக்கலாம் என்றும், அதனால் திருமணம் நின்றுபோன அவமானத்துக்கு ஆளான பிரகாஷ் கொலை மற்றும் தற்கொலையில் இறங்கியிருக்கலாம் எனவும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வருகிறது.
இதையும் வாசிக்கலாமே...