'ராம்' படப்பாணியில் பெண் கழுத்தை அறுத்துக் கொலை... சென்னையில் பயங்கரம்!


கொலை செய்யப்பட்ட பொன்னி

'ராம்' படப்பாணியில் சென்னையில் பெண் கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இக்கொலை தொடர்பாக மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை திருவான்மியூர் ரங்கநாதன் புரம் பகுதியைச் சேர்ந்தவர் பொன்னி(58). இவரது மகள் கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து சென்று தனியாக வாழ்ந்து வருகிறார். இதனால் மருமகன் அய்யப்பன் தனது மாமியார் பொன்னியை கவனித்து வந்துள்ளார்.

கார்பென்டராக வேலை செய்து வரும் அய்யப்பன் நேற்று காலை வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார். இந்த நிலையில் அவரது மாமியார் பொன்னி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இரவு 9 மணியளவில் வேலை முடிந்து அய்யப்பன் வீட்டிற்குள் சென்று பார்த்த போது மாமியார் பொன்னி சமையல் அறையில் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து உடனடியாக அவர், திருவான்மியூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்ததார். இதன் பேரில் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து பொன்னி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இக்கொலை சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது, பொன்னியின் பக்கத்து வீட்டில் வசித்து வரும் அருள்மணி (19) என்ற இளைஞன் மது பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும், வீட்டில் யாருமில்லாத நேரத்தில் நண்பர்கள், மற்றும் சில பெண்களை அழைத்து மது குடித்து விட்டு அட்டகாசம் செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

அருள்மணி

இதனை பக்கத்து வீட்டில் வசித்து வந்த பொன்னி கண்டித்து வந்துள்ளார். ஆனால், அருள்மணி இதைக் கேட்காமல் மது, மாது, கும்மாளம் என தொடர்ந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வந்தால் அருள்மணியின் நடவடிக்கை குறித்து அவரது பெற்றோரிடம் பொன்னி தெரிவித்தாக கூறப்படுகிறது.

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், அருள்மணியை கண்டித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அருள்மணி அவரது நண்பர்களான பெசன்ட் நகரைச் சேர்ந்த விக்னேஷ்(20), திருவான்மியூரைச் சேர்ந்த தினகரன்(21) ஆகியோருடன் சேர்ந்து நேற்று இரவு வீட்டில் தனியாக இருந்த பொன்னியை கழுத்தறுத்து கொலை செய்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து திருவான்மியூர் போலீஸார் 3 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அமீர் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடித்த 'ராம்' படத்தில் பக்கத்து வீட்டில் வசித்து வந்த இளைஞர் போதைக்கு அடிமையானதை கண்டு அவரது பெற்றோரிடம் சொல்லுவேன் எனக்கூறும் சரண்யா கொலை செய்யப்படுவது போல கதை இடம் பெற்றிருக்கும். அப்படப்பாணியில் சென்னையில் கொலை நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

x