கிணற்றில் தவறி விழுந்து இரவு முழுவதும் தவித்த மாற்றுத்திறனாளி... காரைக்குடியில் அதிர்ச்சி சம்பவம்!


கிணற்றில் விழுந்த மாற்றுத்திறனாளி ரஞ்சித்குமார் பத்திரமாக மீட்பு

காரைக்குடியில் கிணற்றுக்குள் தவறி விழுந்த மாற்றுத்திறனாளி, இரவு முழுவதும் வெளியே வர முடியாமல் தவித்த நிலையில், தீயணைப்பு துறையினர் அவரை பத்திரமாக மீட்டனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி டிடி நகர் 3வது வீதியில் பல வருடங்களாக பயன்பாடின்றி வீடு ஒன்று பூட்டிக் கிடந்தது. இந்த வீட்டின் பின்புறம் கிணறு ஒன்று அமைந்துள்ளது. இன்று காலை அப்பகுதியில் துப்புரவு பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கிணற்றுக்குள் இருந்து வித்தியாசமான சத்தம் வருவதை கண்டு அவர்கள் சந்தேகம் அடைந்து உள்ளே எட்டி பார்த்துள்ளனர். அப்போது இளைஞர் ஒருவர் கிணற்றில் உள்ள பைப்பை பிடித்தபடி தொங்கிக் கொண்டிருப்பதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

கிணற்றில் விழுந்த ரஞ்சித்குமாரை மீட்ட தீயணைப்புத்துறையினர்

உடனடியாக இது தொடர்பாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், கயிறுகள் மூலம் அவரை நீண்ட நேரம் போராடி பத்திரமாக மீட்டனர். பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் அதே பகுதியில் பெட்ரோல் பங்க் ஒன்றில் வேலை பார்த்து வரும் ரஞ்சித் குமார் என்பது தெரிய வந்தது. வாய் பேச முடியாத, காது கேட்காத மாற்றுத்திறனாளியான ரஞ்சித் குமார், நேற்று இரவு வழி தவறி இந்த வீட்டிற்குள் வந்து கிணற்றில் விழுந்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

மீட்புப்பணியில் தீயணைப்புத்துறையினரும் துப்புரவு பணியாளர்களும்

இருப்பினும் ஆள் அரவமற்ற இடத்துக்கு எப்படி ரஞ்சித் குமார் வந்தார் என்பது தொடர்பாக போலீஸார் தீவிரமாக விசாரிக்கின்றனர். இதனிடையே கிணற்றில் விழுந்ததில் காயம் அடைந்த ரஞ்சித் குமாருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

சென்னையில் அதிகாலையில் கொட்டித் தீர்த்த மழை... 4 நாட்களுக்கு வெப்பம் குறையும் என அறிவிப்பு!

x