அதிர்ச்சி வீடியோ... கர்ப்பிணி வேடத்திற்கு மாறும் பெண்கள்... சுற்றி வளைத்த பொதுமக்கள்!


வயிற்றில் துணி மூட்டைகளை கட்டிக்கொண்டு கர்ப்பிணிகள் எனக்கூறி யாசகம் எடுத்து மோசடி செய்த பெண்

திருப்பூரில் கர்ப்பிணிகள் போல் வேடம் அணிந்து பேருந்து நிலையத்தில் பிச்சை எடுத்து மோசடியில் ஈடுபட்ட இரண்டு பெண்களை பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்து தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பல்வேறு ஊர்களுக்கும், கிராமப்புறங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்ற நிலையில், ஏராளமான பயணிகள் தினந்தோறும் இங்கு வந்து செல்கின்றனர். எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த பகுதியில் ஏராளமானோர் யாசகம் எடுப்பதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. பயணிகளின் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பல குற்ற சம்பவங்களும் பேருந்து நிலையத்தில் அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது.

போலீஸார் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு இதுபோன்ற நபர்களை கைது செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக திருப்பூர் பேருந்து நிலையத்தில் இரண்டு பெண்கள் கர்ப்பிணிகள் போல் நடமாடி வந்துள்ளனர். பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள் மற்றும் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகளிடம் இவர்கள் பணம் கேட்டுள்ளனர். கர்ப்பிணிகள் மற்றும் மருத்துவ செலவு என்று கேட்பதால் பலரும் மனிதாபிமானத்தோடு இவர்களுக்கு உதவி வந்துள்ளனர். தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களிலும் இவர்கள் இதே பகுதியில் சுற்றிக் கொண்டிருந்ததால் இவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்ட நிலையில், சிலர் இவர்களைப் பின் தொடர்ந்து சென்று பார்த்துள்ளனர்.

வயிற்றில் துணி மூட்டைகளை கட்டிக்கொண்டு கர்ப்பிணிகள் எனக்கூறி யாசகம் எடுத்து மோசடி செய்த பெண்கள்

நேற்று பேருந்து நிலையத்தில் உள்ள எஸ்கலேட்டர் பகுதிக்கு காலையில் வந்த இந்த இரண்டு பெண்களும், தங்களது வயிற்றில் துணி மூட்டைகளை சுற்றி கொண்டிருப்பதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் கர்ப்பிணிகள் போல் வேடமணிந்து இருவரும் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைக் கண்ட அங்கிருந்த பொதுமக்கள் சிலர், இருவரையும் கையும் களவுமாக பிடித்து அவர்களை எச்சரித்தனர். தொடர்ந்து அவர்களை சிலர் தாக்கவும் முற்பட்டதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி அவர்களை அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.

இதனிடையே இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பொதுமக்கள் இது போன்ற மோசடி நபர்களை நம்பி ஏமாற வேண்டாம் என அந்த பதிவில் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

சென்னையில் அதிகாலையில் கொட்டித் தீர்த்த மழை... 4 நாட்களுக்கு வெப்பம் குறையும் என அறிவிப்பு!

x