ரவுண்டு கட்டும் போலீஸ்... சவுக்கு சங்கர் மீது திருச்சியிலும் வழக்குப் பதிவு!


கோவை நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர்

சங்கரின் காரில் கஞ்சா:

கோவை, சேலத்தை தொடர்ந்து திருச்சியிலும் சவுக்கு சங்கர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, போதைப் பொருள் வைத்திருந்த வழக்கு தொடர்பாக மதுரை போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதற்காக தேனி போலீஸார் அவரை அழைத்துச் சென்றனர்.

பெண் காவலர்கள் மற்றும் பெண்களை இழிவாக பேசியதாக பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை சமீபத்தில் தேனியில் வைத்து கோவை சைபர் கிரைம் குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து அவர் கோவை அழைத்து வரப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே தேனியில் கைது செய்யப்படும்போது, சங்கரின் காரிலிருந்து கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

சவுக்கு சங்கர்

5 பிரிவுகளில் வழக்கு:

இது தொடர்பாக தேனி போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்த நிலையில், மதுரை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கில் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று பலத்த பாதுகாப்புடன் சங்கரை தேனி போலீஸார் வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.

பெண்களை இழிவாக பேசிய விவகாரம் தொடர்பாக சேலம் மாநகர போலீஸாரும் சவுக்கு சங்கர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். 5 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த வழக்கிலும் அவரை கைது செய்ய போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

சவுக்கு சங்கர்

இந்த நிலையில் திருச்சியிலும் புதிதாக சவுக்கு சங்கர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் திருச்சி மாநகர போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் சங்கரை கைது செய்ததற்கான ஆதாரங்கள் அவரிடம் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களிலும் சவுக்கு சங்கர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

x