நீதிமன்றத்தில் ஆஜராக வந்த ரவுடிக்கு ஸ்கெட்ச்... பட்டாக் கத்திகளுடன் பதுங்கியிருந்த திமுக நிர்வாகி உள்பட 6 பேர் கைது!


கைது செய்யப்பட்ட திமுக நிர்வாகி யஸ்வந்த் ராயன் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்

பழிக்குக் பழியாக நீதிமன்றத்தில் ஆஜராக வந்த ரவுடியை கொலை செய்ய‌ திட்டமிட்ட திமுக நிர்வாகி உள்பட 6 பேர் பயங்கர ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட சம்பவம், சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பிராட்வே ராஜா அண்ணாமலை மன்றம் பின்புறத்தில் உள்ள டீக்கடை அருகே ஆயுதங்களுடன் ஒரு கும்பல் பதுங்கி இருப்பதாக எஸ்பிளனேடு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீஸார் அங்கு விரைந்து சென்று தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு 6 பேர் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருப்பதைக் கண்டுபிடித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள்

அவர்களை கைது செய்து பட்டாக்கத்திகளை‌ப் பறிமுதல் செய்த போலீஸார் அவர்களை எஸ்பிளனேடு காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

கைது செய்யப்பட்டவர் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள்

அப்போது, கைது செய்யப்பட்டவர்கள் சென்னை ஓட்டேரி மங்களபுரத்தைச் சேர்ந்த யஸ்வந்த் ராயன், பெரம்பூரைச் சேர்ந்த பிரான்சிஸ், கோகுல்நாத், கார்த்திக், அயனாவரத்தைச் சேர்ந்த கார்த்திகேயன், ஜெய்பிரதாப் என்பது தெரியவந்தது. இதில் யஸ்வந்த் ராயன் திமுகவில் ஓட்டேரி மங்களபுரம் பகுதி சிறுபான்மை பிரிவு துணைச் செயலாளராக உள்ளதும், இவர் மீது ஓட்டேரி காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு நிலுவையில் உள்ளது தெரியவந்தது.

இதே போல் பிரான்சிஸ் மீது ஓட்டேரி, அபிராமபுரம் காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குககள் நிலுவையில் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர் விசாரணையில் கைதான திமுக பிரமுகர் யஸ்வந்த் ராயன், பிரான்சிஸ் ஆகியோருக்கும் சென்னை அயனாவரத்தை சேர்ந்த சரண் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. கடந்த 2023 நவம்பர் மாதம் அம்பத்தூர் பகுதியில் வைத்து யஸ்வந்த் ராயனை சரண் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து வெட்டியதில் படுகாயத்துடன் யஷ்வந்த் உயிர் தப்பினார். இது தொடர்பாக அம்பத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சரண் மற்றும் அவரது கூட்டாளிகளை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பிறகு ஜாமீனில் வெளியே வந்த சரணை கொலை செய்ய யஸ்வந்த் ராயன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து திட்டம் தீட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் சரண் மீது பரங்கிமலை காவல் நிலையத்தில் போதைப்பொருள் வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த வழக்கு‌ விசாரணைக்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜராக சரண் நேற்று வருவதை அறிந்து கொண்ட யஷ்வந்த் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து சரணை கொலை செய்யப்பட்ட பதுங்கி இருந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து எஸ்பிளனேடு போலீஸார் 6 பேர்‌ மீது வழக்குப் பதிவு செய்து அவர்களிடம் இருந்து 4 பட்டாக்கத்திகள், 3 பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கைதான 6 பேரிடம் போலீஸார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

x