தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூபாய் 4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் பாஜக பிரமுகர் கோவர்தன் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான ஓட்டலில் சிபிசிஐடி போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர்.
தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி ரூபாய் 4 கோடி பறிமுதல் செய்த வழக்கில் சிபிசிஐடி போலீஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக பணத்தைக் கொண்டு சென்றபோது கைதானவர்கள் இந்த பணம் நெல்லை மக்களவைத் தொகுதியின் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என்றும், தேர்தலில் பணம் பட்டுவாடா செய்வதற்காக பணத்தை கொண்டு செல்வதாகவும் வாக்குமூலம் அளித்தனர்.
அதன் அடிப்படையில் 4 கோடி ரூபாய் பணத்தை கொண்டு சென்ற நபர்கள் மற்றும் இவ்வழக்கில் தொடர்பு உள்ளவர்களுக்கு சிபிசிஐடி போலீஸார் சம்மன் அளித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
இந்த நிலையில் இன்று நீலாங்கரையில் உள்ள பாஜக பிரமுகர் கோவர்தனின் வீடு மற்றும் கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவருக்கு சொந்தமான நட்சத்திர ஓட்டலில் சிபிசிஐடி போலீஸார் தீவிர சோதனை மேற்கொண்டனர். மேலும் சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக பாஜக பிரமுகர் கோவர்தன் மற்றும் அவரது மகன் கிஷோரிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர்.
குறிப்பாக கோவர்தன் நடத்தி வரும் ஓட்டலில் பணம் கைமாற்றப்பட்டது விசாரணையில் தெரியவந்ததால் தகுந்த ஆவணங்களைக் கேட்டும், பணம் கைமாற்றப்பட்ட நாளன்று உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இவர்களிடம் பெறப்பட்ட வாக்குமூலம் மற்றும் ஆவணங்களை அடிப்படையாக வைத்து அடுத்ததாக நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் அளித்து விசாரணை நடத்த உள்ளதாக சிபிசிஐடி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் வாசிக்கலாமே...
குழந்தையை தூக்கிப் போட்டுப் பிடித்து கொஞ்சி மகிழ்ந்த பிரதமர் மோடி... தீயாய் பரவும் வீடியோ!
சுங்கக் கட்டணம் செலுத்தாமல் சென்ற கார்... தடுத்த ஊழியர் மீது காரை ஏற்றியதால் பரபரப்பு!