பிளஸ் 2 தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மாணவி எடுத்த விபரீத முடிவு... கதறும் குடும்பத்தினர்!


உயிரிழந்த மாணவி மேனகாவிற்கு வைக்கப்பட்டுள்ள அஞ்சலி பதாகை

புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. சுமார் 7.60 லட்சம் பேர் எழுதிய இந்த தேர்வில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தோல்வியடைந்தனர். இருப்பினும் தோல்வியடைந்தவர்கள் மீண்டும் மறு மதிப்பீடு மற்றும் மறு கூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும், இந்த ஆண்டே மறு தேர்வு எழுதி கல்லூரிகளில் சேர்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து, மாணவர்கள் பலரும், மறு கூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்காக விண்ணப்பித்து வருகின்றனர்.

மாணவி மேனகாவின் வீடு அமைந்துள்ள பகுதி

புதுச்சேரி அடுத்த ஓதியம்பட்டு பகுதியைச் சேர்ந்த ஜெயபால்-பச்சையம்மாள் தம்பதியினரின் மகள் மேனகா (17). இவர் மரப்பாலம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதியிருந்தார். நேற்று தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், மாணவி மேனகா குறைந்த மதிப்பெண் (334) மட்டும் எடுத்திருந்தார். இதனால் அவர் சோகத்துடன் காணப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று மதியம் 2 மணியளவில் வீட்டில் யாரும் இல்லாத போது மாணவி மேனகா திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வில்லியனூர் போலீஸார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப் பதிவு செய்து மாணவி மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டு வாழ்வில் வெற்றி பெறலாம்

மாணவர்கள் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடக்கூடாது எனவும், தேர்வு முடிவுகள் மட்டுமே வாழ்க்கையை முடிவு செய்யும் காரணிகள் அல்ல எனவும் பள்ளிக்கல்வித்துறையினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். தற்கொலை எந்த பிரச்சினைக்கும் தீர்வு அல்ல என்பதை மாணவச் செல்வங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தற்கொலை எண்ணங்களில் இருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற நல்வாழ்வுத்துறை ஹெல்ப்லைன் 104 மற்றும் சினேகா தற்கொலை தடுப்பு ஹெல்ப்லைன் 044-24640050 என்ற எண்களை தொடர்பு கொள்ளவும்.

x