யோகி ஆதித்யநாத் குறித்து டீப்ஃபேக் வீடியோ வெளியிட்டவர் கைது... உ.பி போலீஸார் அதிரடி!


தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் யோகி ஆதித்யநாத்

உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் குறித்த "டீப்ஃபேக்" வீடியோவை வெளியிட்ட நபரை, அம்மாநில காவல்துறையின் சிறப்பு அதிரடிப் படை கைது செய்துள்ளது.

நேற்று உத்தரப் பிரதேச முதல்வர் குறித்து ஏஐ தொழில்நுட்பம் மூலமாக உருவாக்கப்பட்ட டீப்ஃபேக் வீடியோ, எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வைரலானது. இதுகுறித்து இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 468 (போலியான தகவல்களால் ஏமாற்றுதல்), 505 (2) (பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் அறிக்கை) மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் விதிகளின் கீழ் நொய்டா சைபர் கிரைம் காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக தீவிரமாக விசாரித்த காவல்துறை, நொய்டாவைச் சேர்ந்த ஷியாம் கிஷோர் குப்தா என்பவரை கைது செய்தனர்.

ஏஐ தொழில்நுட்பம்

இது குறித்து பேசிய நொய்டா கூடுதல் காவல்துறை இயக்குநர் அமிதாப் யாஷ், “மே 1 அன்று, உத்தரப் பிரதேச முதல்வர் குறித்து ஏஐ தொழில்நுட்பம் மூலமாக உருவாக்கப்பட்ட டீப்ஃபேக் வீடியோ, எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்ட பின்னர் வைரலானது. அந்த வீடியோ உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பவும், தேச விரோத சக்திகளை வலுப்படுத்தவும் பயன்படுத்தப்பட்டது.

யோகி ஆதித்யநாத்

இதனை தொடர்ந்து, இன்று குற்றம் சாட்டப்பட்ட ஷியாம் கிஷோர் குப்தா கைது செய்யப்பட்டார். மேலும் நொய்டாவில் உள்ள உள்ளூர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஷியாம் குப்தா நொய்டாவில் வசிப்பவர் ஆவார். அவர் தனது எக்ஸ் சுயவிவரத்தில் 'ரெஹ்ரி-பத்ரி' (தெரு வியாபாரிகள்) நலச் சங்கத்தின் தலைவர் எனக் குறிப்பிட்டுள்ளார்” என்று அவர் கூறினார்.

இதையும் வாசிக்கலாமே...

உருவாகிறது ரஜினிகாந்த் பயோபிக்... தனுஷின் ஆசை நிறைவேறுமா?

x